வெண்மை புரட்சி நாயகன் வர்கீஸ் குரியனின் பிறந்தநாளையொட்டி, ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது உருவப்படம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

1970 வரை இந்தியா முழுவதும், பாலுக்கு அதிகமான தட்டுப்பாடு நிலவியது. பால் ரேஷனில் வழங்கப்பட்டது. தாய்மார்கள் குழந்தைகளின் பசி தீர்க்கத் தடுமாறினார்கள். அந்நிலையில் இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர் வர்கீஸ் குரியன். இந்தியாவின் பால் மனிதர் என்று போற்றப்படும் டாக்டர் வர்கீஸ் குரியனின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் தேசிய பால் தினம் இன்று மத்திய அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது.


கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் 1921 நவம்பர் 26ம் தேதி பிறந்தவர், வர்கீஸ் குரியன். சென்னை லயோலா கல்லுாரியில், இயற்பியல் பட்டம் பெற்ற இவர், இயந்திரவியல், உலோகவியல், கால்நடை பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்கிறார். குஜராத்தின் ஆனந்த் எனும் இடத்தில் உள்ள ’அமுல்’ நிறுவனத்தின் பால் உற்பத்தி தொழிற்கூடத்தை மேம்படுத்துவதில் முழு பங்காற்றியிருக்கிறார். மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, கூட்டுறவு பால் உற்பத்தித் திட்டத்தை, மாபெரும் தேசிய திட்டமாக மாற்றி உலகிலேயே மிகப்பெரிய பால் உற்பத்தி நாடாக இந்தியாவை உயர்த்தினார்.

இந்நிலையில் அவரது நினைவை போற்று விதமாக அவரது பிறந்தநாளான நவம்பர் 26-ம் தேதியான இன்று தேசிய பால் தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் வர்கீஸ் குரியன் கவுரவிக்கும் விதமாக தமிழகத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது உருவப்படம் அச்சிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு குரியனின் நூற்றாண்டு பிறந்த தினம் என்பதால் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தேசிய பால் வாரியம் உள்ளிட்டவை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.


அதனைத்தொடர்ந்து தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் டாக்டர் குரியனால் உருவாக்கப்பட்ட இதர நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, நாட்டு மாடு, எருமை இனங்களை வளர்க்கும் சிறந்த பால் பண்ணையாளர், சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் சிறந்த பால் கூட்டுறவு சங்கம், பால் உற்பத்தியாளர் உள்ளிட்ட விருதுகளை வென்றவர்களுக்கு தேசிய கோபால் ரத்னா விருதுகளை வழங்கினார்.

வர்கீஸ் குரியன் பணியை போற்றும் வகையில், குரியனின் நூற்றாண்டு தினத்தை ஒட்டி அவரது படத்தை ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிட்டு பெருமை படுத்தியுள்ளதை பால் உற்பத்தியாளர்கள், முகவர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.