மழையில் சறுக்கி விழுந்த யானை அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பொள்ளாச்சி மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதில், பொள்ளாச்சியை ஒட்டிய வனப்பகுதிக்கும், அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் இடையே அகழி உள்ளது. இந்நிலையில், சரளபதி கிராமத்தை ஒட்டியுள்ள அகழியில், வனத்துறையிலிருந்த வெளியே வந்த யானை ஒன்று, அந்த வழியாகக் கடந்து சென்றுள்ளது.
அப்போது, அந்த பகுதியில் மழை பெய்து, அந்த இடமே சேறும் சகதியுமாக இருந்துள்ளது. இதனிடையே, அந்த இடத்தை கடக்க யானை முற்பட்டபோது, எதிர்பாராத விதமாகச் சேற்றில் வழுக்கி, அருகில் உள்ள அகழியில் விழுந்துள்ளது.
இதில், யானையின் மார்பு பகுதி மற்றும் தலை பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், யானையின் தும்பிக்கை உடைந்து போனது போல், மடங்கி உள்ளது. தும்பிக்கையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், உயிரிழந்த யானைக்கு 30 வயது இருக்கும் என்று தெரிவித்தனர். இதனிடையே, கடந்த ஒரு வருடத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் 4 யானைகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.