பெண் காவலரின் உதட்டைக் கடித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் எந்த தண்டனையுமின்றி, ஆண் காவலர் பக்கத்து ஏரியா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதுவும், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தான்.
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கம்பியூட்டர் பிரிவில் பணியாற்றி வரும் இளம் பெண் ஒருவர், பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த இளம் பெண் காவலரிடம், அதே காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வந்த வெங்கடேசன் என்ற போலீஸ், அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
அதாவது, அந்த பெண் காவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த ஆண் காவலர், அந்த பெண் காவலரின் உதட்டைக் கடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண் காவலர், இது தொடர்பாக தெற்கு மண்டல இணை ஆணையர் நரேந்திரன் நாயரிடம் பாலியல் புகார் அளித்திருக்கிறார்.
இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் உயர் அதிகாரி, இந்த புகாரின் பேரில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.
இதனையடுத்து, தண்டனை என்ற பெயரில், சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய எழுத்தர் வெங்கடேசனை 1,2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கத்து பகுதியான எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், காவல் நிலைய எழுத்தர் வெங்கடேசனிடம் அதிகாரிகள் துறை ரீதியிலான விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் அவர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே, பெண் காவலரின் உதட்டை, ஆண் காவலர் கடித்துள்ள சம்பவமும், இந்த குற்றத்திற்காக, எந்த தண்டனையுமின்றி, ஆண் காவலர் பக்கத்து ஏரியா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட சம்பவமும் இணையத்தில் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.