மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணிகளை நிரப்ப தேர்வாணையம் அமைக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், வாரணாசி இந்து பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி ஒரே ஒரு பேராசிரியர் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து நியமிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு பதிலாக, ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக, 0.77% மட்டும் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இணைப் பேராசிரியர் பணியைப் பொறுத்தவரை 735 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 38 ஓ.பி.சி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது இணை பேராசிரியர் பணிகளில் ஓ.பி.சி.க்கு 1.39% இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணிகளில் மட்டும் தான் ஓ.பி.சி.களுக்கு சுமார் 16% இடஒதுக்கீடு கிடைத்துள்ளது.
மத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்த நிலை என்றால், ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் ஓபிசிகளுக்கான இடஒதுக்கீடு இன்னும் மோசமாக இருக்கிறது. இது மிகப்பெரிய சமூக அநீதி. உயர்கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி. வகுப்பினருக்கு எதிரான சக்திகளின் ஆதிக்கம் இன்னும் முறியடிக்கப்படவில்லை. அந்த சக்திகளுக்கு எல்லையில்லாத அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால், அதைப் பயன்படுத்தி பேராசிரியர் பணிகளுக்கு ஓ.பி.சி.கள் எவரும் வராத வகையில் தடுக்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட்டால் தான் சமூகநீதியை நிலைநிறுத்த முடியும்.
ஓபிசிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வேறு யார் கைப்பற்றியுள்ளனர்? அது எவ்வாறு சாத்தியமானது? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் ஆட்களை நியமிக்கும் அதிகாரத்தை அந்த நிறுவனங்களின் தலைவர்களிடமிருந்து பறிக்க வேண்டும். அந்தப் பணியை மேற்கொள்ள வெளிப்படைத் தன்மை கொண்ட தேர்வாணையம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார் .