கொரோனா பரவலைத் தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் 40 ஆம் ஆண்டின் நிறுவன தினமான இன்று, பாஜக தொண்டர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “பாஜக நினைவு தினம் கடைப்பிடிக்கப்படும் இன்றைய சூழலில், இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகள் யாவும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக” குறிப்பிட்டார்.

“மனிதம் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. நாட்டுக்காக நமது அர்ப்பணிப்பான சேவை, இந்த சவாலான தருணத்தில் நமக்கான பாதையை உருவாக்குவது அவசியம்” என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.



மேலும், “கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்றும், இந்தியாவின் முழுமையான அணுகுமுறையை உலக சுகாதார நிறுவனமே பாராட்டுகிறது என்றும், கொரோனா பரவலைத் தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்கிறது” என்றும் பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்.

“இந்திய மக்கள் ஒன்றாக இணைந்து கொரோனா நோயைத் தோற்கடிப்பார்கள் என்றும், ஊரடங்கின்போது, மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்கள் காட்டிய முதிர்ச்சி தன்மை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது இருப்பதாகவும் பெருமிதம்” கொண்டார்.

அதேபோல், “கொரோனாவை தோற்கடிக்க இந்திய மக்கள் இந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க முடியாது என்றும், கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா, அதனைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றும் பிரதமர் மோடி நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார்.