“கொரோனாவுக்கு எதிராக நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மஹாசக்தியை வெளிப்படுத்துவோம்!” என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, இன்று காலை நாட்டு மக்கள் முன்னிலையில், பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு என் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துக்கொண்டார்.
“நாட்டு மக்கள் அனைவரும், அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். இந்திய மக்களின் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி திகழ்வது பெருமையாக இருக்கிறது” என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
“குறிப்பாக, நாட்டு மக்கள் அனைவரும் வரும் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல், மின்விளக்கை அணைத்துவிட்டு விளக்கு, அகல் விளக்கு, மெழுதிரி ஆகியவற்றை ஏற்றி, 9 நிமிடங்களுக்கு விளக்குகளை ஏற்றி எரிய விட்டு, மாபெரும் மஹாசக்தியை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெளிப்படுத்த வேண்டும்” என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் எனவும், கொரோனாவுக்கு எதிரான மஹாசக்தியை வெளிப்படுத்தும் நேரம் இது” என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டி உள்ளார்.
“வீட்டில் இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும், வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்” என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.