“தெய்வ மகள்” “அரண்மனைக்கிளி” சீரியலில் நடித்த நடிகை, கணவருடன் சேர்ந்து சொந்த வீட்டிலேயே திருட்டில் ஈடுபட்டு கை வரிசை காட்டிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்த 55 வயதான தேசிங்கு என்பவர், அப்பகுதியில் சமையல் வேலை பார்த்து வருகிறார்.
இதனிடையே, கடந்த 12 ஆம் தேதி தேசிங், தனது வீட்டைப் பூட்டி விட்டு, வெளியே சென்று உள்ளார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 18 சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த தேசிங் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பண்ருட்டி போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தேசிங்கின் மகன் மணிகண்டனின் பேச்சு மற்றும் அவரது செயல்பாடுகளில் போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தான் அந்த நகைகள் மற்றும் பணத்தைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது, “சொந்த வீட்டில் திருட காரணம் என்ன? என்று போலீசார் விசாரித்து உள்ளனர். அந்த விசாரணையில், கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் மணிகண்டன், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, சென்னையில் தனியாக வசித்து வந்தார்.
அப்போது, “தெய்வ மகள்”, “அரண்மனைக்கிளி” ஆகிய சீரியலில் நடித்து வரும் துணை நடிகை பரமேஸ்வரி என்கிற சுசித்ராவுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி உள்ளது. இதனையடுத்து, அந்த நடிகையை மணிகண்டன் வீட்டிற்குத் தெரியாமல் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டு, சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, சுசித்ராவுக்கு சீரியல் படப்பிடிப்பு இல்லாத நிலையில், வீட்டுச் செலவுக்குக் கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டு உள்ளனர். மணிகண்டனுக்கும் கார் ஓட்டும் பணியும், இந்த சூழலில் கிடைக்கவில்லை. இதனால், அவர்கள் இருவரும் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக, கடுமையான பண நெருக்கடியில் இருவரும் சிக்கி தவித்து உள்ளனர்.
அப்போது, மனைவியும் நடிகையுமான சுசித்ரா, கணவன் மணிகண்டனுக்கு ஒரு ஐடியா கொடுத்து உள்ளார். அதாவது, 'மாமனார் வீட்டில் (மணிகண்டன் தந்தை வீட்டில்) உள்ள நகைகளைத் திருடலாம்' என்று, ஆலோசனை கூறி உள்ளார்.
அத்துடன், தனது நடிப்பு வேலையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்தவும் திட்டமிட்டனர். அதாவது, 'வீட்டு செலவு போக, மீதமுள்ள பணத்தில் புதிய மெகா சீரியல் தயாரித்து அதில் நான் கதாநாயகியாக நடிக்கிறேன் என்றும், குறும்படத்தை இயக்கி அதிலும் நாயகியாக நடிக்கிறேன்' என்றும், அந்த நடிகை திட்டமிட்டு தன் கணவனிடம் ஐடியா கொடுத்து உள்ளார்.
இதனையடுத்து, மனைவியின் சொல்படி, சொந்த வீட்டிலேயே மணிகண்டன் தன் கை வரிசைகளைக் காட்டி, நகைகளைத் திருடி உள்ளார். அதன் பிறகு, அந்த நகைகளை பண்ருட்டியில் உள்ள ஒரு நகைக் கடையில் விற்று உள்ளனர்.
இதனையடுத்து, மணிகண்டனை கைது செய்த போலீசார், நகைகளையும் பணத்தையும் மீட்டு உள்ளனர். கணவன் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும், அவர் தலைமறைவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தலைமறைவாக உள்ள சின்னத்திரை நடிகை சுசித்ராவைத் போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே, திருட்டு வழக்கில் பிரபல சீரியல் நடிகை சிக்கி உள்ள சம்பவம், சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.