“காப்பான்”பட பாணியில் பயிர்களைச் சூறையாடும் வெட்டுக்கிளிகளால், பாகிஸ்தானில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான “காப்பான்” படத்தில், வெட்டுக்கிளிகளை ஏவி, விவசாய பயிர்களை நாசமாக்குகிறது போன்று ஒரு காட்சி வரும். அந்த காட்சியை, உண்மைக்கும் விதமாகப் பாகிஸ்தானில் உள்ள வேளாண் விவசாய பயிர்களை, வெட்டுக்கிளிகள் கூட்டம் நாசம் செய்து வருகின்றன.
கடந்த ஜுன் மாதம் ஈரானிலிருந்து பாகிஸ்தான் வந்த வெட்டுக்கிளிகள் கூட்டம், பாகிஸ்தானில் உள்ள வேளாண் விவசாய பயிர்களை நாசமாக்கி, கடுமையாகச் சேதப்படுத்தி வருகின்றன.
இதனால், அந்நாட்டில் பயிரிடப்பட்டிருந்த கோதுமை, பருத்தி உள்ளிட்ட அனைத்து வகையான விவசாய பயிர்களும் முற்றிலுமாக வீணாகி உள்ளன. இதனால், அந்நாட்டு விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒருமுறை வெட்டுக்கிளிகள் படையெடுத்தால், சுமார் 2 லட்சம் டன் உணவுப் பொருள் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகளைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவசர நிலையை அறிவித்து, நாட்டு மக்களிடம் உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான், “வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த 730 கோடி ரூபாய் ஒருதுக்கி உள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், பருவ நிலை மாற்றங்களால், வெட்டுக்கிளிகள் நாடு விட்டு நாடு என, கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களைச் சேதப்படுத்துவதாகக் கவலை” தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, கடந்த 1993 ஆம் ஆண்டு இதே போல், பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் கூட்டம் பயிர்களைச் சேதப்படுத்தியது. ஆனால், அதைவிடப் பல மடங்கு அளவுக்கு தற்போது சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, பாகிஸ்தானைத் தொடர்ந்து, இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள், விவசாய பயிர்களை நாசமாக்கி வருகின்றன. இதனால், இந்திய விவசாயிகள் கடும் பீதியில் உரைந்துள்ளனர்.