சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானமாக எதுவும் வாங்கப்படாமல் கடன் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் பற்றி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை சந்தித்து விளக்கமாக எடுத்துக்கூறினார்.
அப்போது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மின் விநியோக நிறுவனங்களுக்கு 90,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும் என்றும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான பகுதி கடன் உறுதி திட்டம் 2.0 என்று அழைக்கப்படும்” என்றும் குறிப்பிட்டார்.
மேலும், “அடுத்த 45 நாட்களுக்கு சிறு, குறு, நடுத்தர நிறுவன உற்பத்தி பொருட்கள் இ-மார்க்கெட் மூலம் விற்க வசதி ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு 30,000 கோடி ரூபாய் சிறப்பு மூலதனம் வழங்கப்படும்” என்றும் கூறினார்.
அத்துடன், “20 கோடி ரூபாய்க்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் நடுத்தர தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும் என்றும், சிறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு 25 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்தார்.
குறிப்பாக, “ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் சிறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும் என்றும், 10 கோடி ரூபாய்க்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் குறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்” என்றும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
அதேபோல், “குறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், நடுத்தர தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு 10 கோடி ரூபாயிலிருந்து 20 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும்” அவர் சுட்டிக்காட்டினார்.
“நிதி திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் மூலதன நிதி வழங்கப்படும் என்றும், சிறு - குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானமாக எதுவும் வாங்கப்படாமல் கடன் வழங்கப்படும்” என்றும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
“இந்த கடனை திருப்பிச் செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும் என்றும், இந்த ஆண்டு அக்டோபர் 31 வரை இந்தக் கடன் உதவி வழங்கப்படும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இதன் மூலம் நாடு முழுவதும் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும்” என்றும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.