10.5% வன்னியர் உள் ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்ட மசோதாவை நிறைவேற்றியது. அதற்கான அரசாணையை திமுக ஆட்சிக்கு வந்ததும் பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,10.5% உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்றும், சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இது சாத்தியம் எனக்கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் உள் ஒதுக்கீடு ரத்து தொடர்பன தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பா.ம.க. சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை திட்டமிட்டபடியே பிப்ரவரி 15, 16ம் தேதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கு கடந்த மாதம் 23ம் தேதி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து இன்று நீதிபதிகள் எல்.நாகேஸ்வராவ் மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்தது தொடர்பான மேல்முறையீட்டு வழக்குக்கு தீர்ப்பு வழங்கியது. அதில், உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், அதற்கான சரியான காரணங்களை கூற வேண்டும் என்று தெரிவித்தனர். சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது என்று கூறிய நீதிபதிகள் வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்று குறிப்பிட்டனர்.
மேலும் வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் அரசியல் சட்டத்தின் 14,16வது பிரிவுகளுக்கு விரோதமானது என்றும், வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என்றும் தீர்ப்பளித்தனர். வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் தமிழ்நாடு அரசு, பாமக உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.