திருமண செலவிற்கும் பணம் இல்லாத விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த காரவிளையை சேர்ந்த 33 வயதான வினீஷ்க்கு, திருமணத்திற்காகப் பெண் பார்த்து, திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, வரும் 20 ஆம் தேதி அவருக்குத் திருமணம் நடைபெற இருந்தது.
இதனிடையே, திருமணத்திற்கு முன்பாக அவர் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டார். அதற்காக, வீடு கட்டும் பணிகளைத் தொடங்கினார். ஆனால், வீட்டை முழுமையாகக் கட்டுவதற்கு அவரிடம் போதுமான பணம் இல்லை.
இதனால், வங்கியில் லோன் போட முயன்றார். ஆனாலும், அவருக்கு வங்கியில் லோன் கிடைக்கவில்லை. இதனால், கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் காணப்பட்டார்.
யாருடன் பேசாமல், சோகமாகக் காணப்பட்ட அவர், நேற்று இரவு வீட்டில் உள்ள அனைவரிடமும் சிரித்துப் பேசிவிட்டு, இரவு தூங்கச் சென்றார்.
இந்நிலையில், தன்னால் இயலவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளா முடியாத அவர், தன்னுடைய வாழ்க்கை அவ்வளவு தான் என்று சற்று யோசிக்காமல் முடிவு எடுத்த அவர், வீட்டின் அறையில் தூக்கில் தொங்கினார்.
இதனிடையே, காலையில் அவருடைய தாயார் வீட்டின் அறையைத் திறந்ததும், மகன் தூக்கில் தொங்குவதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அவர், கதறி அழுதார்.
இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், வினீஷ் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, திருமண செலவிற்கும் பணம் இல்லாத விரக்தியிலும், வீட்டைக் கட்டி முடிக்க முடியவில்லை என்ற விரக்தியிலுமே அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.
இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.