வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறி, நாளை மறுநாள் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக உருவாக இருக்கிறது. அதாவது, தெற்கு மற்றும் வங்கக் கடலின் மத்திய பகுதியில் நேற்று புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருக்கிறது.
இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் நிலையில், அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுவடைந்து வட மேற்கு திசையில் நகர்ந்து செல்கிறது. அதன்படி, நாளை மறுநாள் 25 ஆம் தேதி பிற்பகல் நேரத்தில், காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கிறது.
இதனால், தென் தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழையும், நாளை தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யும் என்றும், வானிலை மையம் கூறியிருக்கிறது.
அத்துடன், நிவர் புயல் காரணமாக வங்க கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நாளைய தினம் இடியுடன் கூடிய அதி கன மழை பெய்யும் என்றும், வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
அதே போல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிக கன மழையும் என்றும், ஏனைய பிற மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
மேலும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகள் வரும் 25 ஆம் தேதியன்று அதி கன மழை பெய்யும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, புதுக்கோட்டை. நாமக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய ஊர்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் 25 ஆம் தேதி ஏனைய வட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், என்றும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, புயல் கரையை கடக்கும் வரை தமிழகத்தின் வட கடலோர பகுதிகளான கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை கடல் அலை 8 அடி முதல் 18 அடி உயரம் வரை சீற்றத்துடன் காணப்படும் என்றும், தென் கடலோர பகுதிகளான குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை 5 அடி முதல் 10 அடி உயரம் வரை சீற்றத்துடன் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறி, நாளை மறுநாள் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால், அந்த பகுதியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.