அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல், தீவிரப் புயலாக மாறி உள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது.

இதில், கடந்த 7 மணி நேரமாக வடக்கு திசையில் நகர்ந்து வந்த நிலையில், அது தீவிரமடைந்து “நிசர்கா” புயலாக தற்போது மாறியுள்ளது.

அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிசர்கா புயலால், மும்பையில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இந்த புயல் கோவா மேற்கு மற்றும் வடமேற்கில் சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தெற்கு மற்றும் தென்மேற்கில் சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், குஜராத்தில் தெற்கு மற்றும் தென்மேற்கில் 640 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது.

மேலும், அடுத்த சில மணி நேரத்தில், தீவிரப் புயலாக மாறி அதிகபட்சம் மணிக்கு 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வரை வேகத்தில் கரையைக் கடக்கும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிசார்கா புயல் இன்று கரையைக் கடக்க உள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மும்பையில் இன்றிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு மும்பை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, நிஷர்கா புயல் தடுப்பு மற்றும் ஊரடங்கு தளர்வு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.