தாலி கட்டும் நேரத்தில் “என் காதலன் வருவான் என்னை கூட்டிப்போக” என்று கூறி, மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞருக்கும், அங்குள்ள தூனேரி கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற இளம் பெண்ணுக்கும், கடந்த 29 ஆம் தேதி வியாழக்கிழமை, அங்குள்ள மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தில் மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. தற்போது கொரோனா காலம் என்பதால், இந்த திருமண நிகழ்ச்சியில், இருவீட்டாரைச் சேர்ந்த முக்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மணமக்கள் இருவரும் படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள். படுகர் இன மக்களின் சம்பிரதாயப்படி, தாலி கட்டுவதற்கு முன் மணப்பெண்ணிடம் மணமகன், தொடர்ச்சியாக 3 முறை “திருமணம் செய்து கொள்ள சம்மதமா?” என்று கேட்க வேண்டும். அப்போது, மணப்பெண் “சம்மதம்” என்று சொன்னால் மட்டுமே, மணமகன் தாலியைக் கட்ட முடியும்.
அதன் படி, திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து மணமகன் தாலி கட்டச் செல்லும் முன்பாக, மணமகள் பிரியதர்ஷினியிடம், “என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?” என்று தொடர்ச்சியாக 3 முறை கேட்டு உள்ளார். இதில், முதல் இருமுறை கேட்ட போது, அமைதியாக இருந்த அந்த பெண், 3 வது முறை கேட்கும் போது, “எனக்கு சம்மதம் இல்லை” என்று கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த மணமகன் அப்படியே உரைந்து போக, அவரை மணப்பெண்ணின் பெற்றோர் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், அதில் பலன் இல்லை.
அப்போது, “ஏன்?” என்று அவரது பெற்றோர் மற்றும் அங்கு கூடியிருந்தவர்கள் கேள்வி கேட்டுள்ளனர். அதற்குப் பதில் அளித்த மணமகள், “ஒரு மணி நேரம் காத்திருங்கள். என்னை அழைத்துச் செல்ல என் காதலன் வருவான். அவர், எனக்காக அவரது திருமணப் பந்தத்தை முறித்துக்கொண்டவர். அவரது குழந்தைகளை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களை நான் திருமணம் செய்துகொண்டால், அவருக்கு நான் துரோகம் செய்தது போல் ஆகி விடும். அதனால், எனக்கு இந்த திருமணம் வேண்டாம்” என்று, கூறி நடைபெற இருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தி உள்ளார்.
அத்துடன், திருமண மண்டபத்தில் இருந்து அவர், செல்ல முற்பட்டார். இதனால், கடும் கோபம் அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், மணப்பெண்ணைக் கண்டித்ததோடு தாக்கவும் செய்தனர். ஆனாலும், உறுதியாக இருந்த அந்த பெண், துளியும் அச்சமின்றி மணிமேடையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
அதன் தொடர்ச்சியாக, அங்கிருந்து புறப்பட்ட மணமகளின் பெற்றோர், நடந்து சென்ற தங்களது மகளை காரில் ஏற்றுக்கொண்டு சென்றனர்.
மேலும், “இனி நீ வீட்டிற்கு வர வேண்டாம் என்று கூறியதோடு, எங்கேயாவது சென்று பிழைத்துக்கொள் என்றும் கூறியும், அவரை வழியிலேயே இறக்கி விட்டுவிட்டு, பெற்றோர் மட்டும் தனியாக வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
கடைசி நேரத்தில் மணமகள் ஒருவர், தனது திருமணத்தைத் தடுத்து நிறுத்திய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன், காதலுக்காக மணமேடை வரை வந்துவிட்டு, மாப்பிள்ளையை அவமதிக்கும் விதமாகக் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகளுக்கு எதிராகப் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.