நாளை அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் அந்தமான் அருகில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று வடக்கே நகரும் என்றும், ஆந்திரா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலில் அந்தமான் அருகில் அடுத்த வாரம் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்து இன்னும் சில நாட்களில் தெரியவரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் நாளை அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.