ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை குறைக்கும் விதமாக மீண்டும் மஞ்சப் பை என்ற பெயரில் பிரச்சாரம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு, கடந்த 2019-ம் ஆண்டு ஜன.1 முதல் அமலில் உள்ளது. இதை செயல்படுத்துவதில் மக்கள் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது. அதனால் இன்று வரை பிளாஸ்டிக் தடையை முழுமையாக அரசால் செயல்படுத்த முடியவில்லை.
இதனையடுத்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இனி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் முதல் தடவை ரூபாய் 1 லட்சம், மீண்டும் செய்தால் ரூபாய் 2 லட்சமும், மூன்றாவது தடவையும் செய்தால் ரூபாய் 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் . மீண்டும் அந்த நிறுவனம் தயாரித்தால் அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும்.
அதேபோல தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கையிருப்பு வைத்திருந்தாலோ அல்லது வாகனங்களில் எடுத்துச் சென்றால் முதல் தடவை ரூபாய் 25 ஆயிரம் அடுத்து 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் அவ்வாறு செய்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நடுத்தர வணிக நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் ஆயிரம் முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் சிறு குறு நிறுவனங்கள் விற்றால் 100 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்பிறகும் இந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். இந்த அபராதங்களை விதிப்பதற்கு வார்டுகள் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மக்கள் இயக்கம் ஒன்றை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக தொடங்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக மக்களின் பாரம்பரிய பழக்கமான மஞ்சள் பையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் விதிமாக 'மீண்டும் மஞ்சள் பை' என்ற பெயரில் மக்கள் இயக்கம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொடங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்போடு பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில, மாவட்ட அளவிலான பணிக்குழுக்களையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்க உள்ளது.