வங்க கடலில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வர வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர தொடங்கி இலங்கைக்கும் தென் தமிழகத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும் என்றும், குறிப்பாக டெல்டா, தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “வரும் 26, 27 ஆகிய நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அதே சமயம் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் இன்று உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பில்லை’ இவ்வாறு புவியரசன் கூறியுள்ளார்.
இதனிடையே தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிக்கொண்டு இருக்கும் நிலையில் இது குறித்து தனியார் வானிலை ஆய்வு மையமான சென்னை ரெய்ன்ஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. chennairains.com பக்கத்திலும் அவர்களின் ட்வீட்டர் பக்கத்திலும் இது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ரெய்ன்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, “தமிழகத்தில் கடந்த அக்டோபர் 26-ல் இருந்தே வடகிழக்கு பருவமழை கிரிக்கெட்டில் பந்து வீசும் பாஸ்ட் பவுலர் போல செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஓவருக்கு ஒரு யார்க்கர், பவுன்சர் வீடும் பவுலர் போல செயல்படுகிறது. கடந்த நவம்பர் 7, 11, 18 தேதிகளில் வடகிழக்கு பருவமழை நல்ல சிறப்பான யார்க்கர்களை குறி வைத்து வீசியது.
இதில் கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி பல உள் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டது. இந்த வார இறுதியில் வர கூடிய மழையும் இந்த சீசனில் அடுத்த சிறப்பான ஓவராக அமைய போகிறது. வங்கக்கடல் மீண்டும் இந்த வார இறுதியில் யார்க்கர் பந்து ஒன்றை தமிழகத்தை நோக்கி போட போகிறது” என்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து சென்னை ரெய்ன்ஸ் கூறியுள்ளது.
அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மீண்டும் வடதமிழகம் கனமழையால் பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. கிழக்கு இலங்கையில் காணப்படும் மேலடுக்கு சுழற்சி, தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதற்கு முன் சென்னை வடக்கு பகுதியில் கரையை கடந்த தாழ்வு மண்டலம் உருவான அதே இடத்தில் இதுவும் உருவாகி வருகிறது.
2020-ல் வந்த நிவர் புயல், புரேவி புயலின் வடமேற்கு நகர்வை இதுவும் கொண்டு இருக்கிறது. டெல்டாவின் கடல் பகுதிகளுக்கு அருகிலும் இந்த தாழ்வு பகுதி வருகிறது. இதனால் ஸ்ரீஹரிகோட்டா தொடங்கி டெல்டா பகுதிகள் வரை மொத்த மண்டலமும் மழையை பெறும். அதிலும் ஸ்ரீஹரிகோட்டா சிதம்பரம் இடையே கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 7, 9-ல் பெய்தது போல இரண்டு விதமான மழை தமிழகத்தில் பெய்யும் வாய்ப்புள்ளது. கடந்த 9-ம் தேதி சென்னையில் dryline thunderstorm காணப்பட்டது. மாராங்க் டெல்டாவில் தீவிர கனமழை பெய்தது. அதேபோல் மீண்டும் ஏற்படலாம். இந்த முறை எந்தெந்த மாவட்டங்களில் இந்த இரண்டு விதமான மழை பெய்யும் என்று உறுதியாக தெரியவில்லை.
இப்போது வட தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படுகிறது. ஆனால் இதுவே பின்பு வடதமிழகத்திற்கு சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளது. இப்போதைக்கு தென் தமிழகத்திலும், ராமநாதபுரம், குமரியிலும் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது” என்று சென்னை ரெய்ன்ஸ் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 9 மற்றும் 13-ந் தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் தாக்கிய நிலையில், ஒரே மாதத்தில் மூன்றாவது தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் உருவாகிகொண்டு இருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.