“வங்க கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக” வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி கடந்த மாதம் கொட்டித் தீர்த்தது. தீவிரமடைந்து கொட்டி தீர்த்த இந்த கனமழையால், தமிழகத்தின் தலைநகர் சென்னை நகரம் சில நாட்கள் ஸ்தம்பித்துப் போனது. இப்படியாக, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் கிட்டதட்ட 20 நாட்களுக்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது.
இதனையடுத்து, இந்த மாதம் தொடக்கம் முதலே தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை சற்று குறைந்து வருகிறது.
இவற்றுடன், தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக பல பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவி வந்தது.
இந்த நிலையில் தான், “வங்க கடலில் நாளை மறுதினம் வெள்ளிக் கிழமை அன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்” என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
“இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தமிழகத்துக்கு பெரிய அளவு மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும், ஆனால் குமரிக்கடல், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கைப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, “மீனவர்கள் யாரும் இந்த பகுதிகளுக்கு வருகிற 19 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம்” என்றும், வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
இவை தவிர, “வட கிழக்கு பருவகாற்றின் காரணமாக, தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், அதுவும் இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும்” என்றும், கணிக்கப்பட்டு உள்ளது.
அதே போல், “வட கிழக்கு பருவ காற்றின் காரணமாக டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், புதுக்கோட்டையில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும்” கூறப்பட்டு உள்ளது.
மேலும், “வட மாவட்டங்கள் மற்றும் பிற இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்” என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.