“கொலைகளில் அடிபடும் சிறுவர்களின் பெயர்கள் இரு மடங்கு அதிகரித்து, தமிழ்நாட்டின் மிக மோசமான சாதனையாக உள்ளதாக” தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து உள்ளதாகத் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்திருந்தது.
அத்துடன், “இந்தியாவில் தினமும் 77 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும், இந்த பாலியல் குற்றத்தில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாகவும்” மத்திய அரசு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் தான், “இந்திய அளவில் சிறுவர்கள் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து உள்ளதாக” மேலும் ஒரு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இவற்றுடன், “போதைப்பொருள் உபயோகிக்கும் பழக்கமும் உயர்ந்து உள்ளது என்றும், தமிழ்நாட்டில் சிறுவர்களும் இளம் பருவத்தினரும் பாதியிலேயே தடம் மாறி இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்” என்றும், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த தகவலைத் தேசிய குற்ற ஆவணக் காப்பகமான என்சிஆர்பி, தற்போது உறுதி செய்து உள்ளது.
மிக முக்கியமாக, “சிறுவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்படுவதில் இந்திய அளவில் 4 ஆம் இடமாகத் தமிழ்நாடு பிடித்து உள்ளது” வேதனை அளிப்பதாக உள்ளது.
அதாவது, “தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கொலைக் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படும் சிறுவர்கள் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளதாக” என்சிஆர்பி கவலையுடன் கூறியுள்ளது.
“கடந்த 2016 ஆம் ஆண்டில் 48 கொலைக் குற்றங்களில் சிறுவர்கள் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அது 2017 ஆம் ஆண்டில் 53 ஆக அதிகரித்தது என்றும், பின்னர் 2018 ஆம் ஆண்டில் 75 ஆகவும், 2019 ஆம் ஆண்டில் 92 ஆகவும்” உயர்ந்தது என்றும் கூறப்பட்டு உள்ளது.
மேலும், “கடந்த 2020 ஆம் ஆண்டில் 104 குற்றங்களாகவும் உயர்ந்திருப்பதாகவும், இப்படியாக கடந்த 2016 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 1,603 கொலைகளில் 48 கொலைக் குற்றங்கள் என்றால் 3 சதவீதம்” என்றும், என்சிஆர்பி கவலையுடன் சுட்டிக்காட்டி உள்ளது.
அதே போல், “இது 2020 ஆம் ஆண்டில் நிகழ்ந்த 1,661 கொலைகளில் 104 குற்றங்கள் என்றால் 6.3 சதவீதம் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர் என்றும், ஆக சிறுவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்ட எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளது” இதன் மூலம் உறுதியாகி உள்ளது” என்றும், என்சிஆர்பி தெரிவித்து உள்ளது.
குறிப்பாக, “இது தேசிய அளவை விட மூன்று மடங்கு அதிகம் என்றும், இந்திய அளவில் 2016 ஆம் ஆண்டு கொலை குற்றம் புரியும் சிறுவர்களின் எண்ணிக்கை 2.9 சதவீதமாக இருந்தது என்றும், இது கடந்த 2020 ஆம் ஆண்டு அது சற்று குறைந்து 2.6 சதவீதமாக மாறி உள்ளது” என்றும், குறிப்பிட்டு உள்ளது.
மிக முக்கியமாக, “சென்னை, மதுரை, திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கொலைக் குற்றங்களில் சிறுவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படும் அளவும் தொடர்ந்து அதிகரித்துள்ளதாக” என்சிஆர்பி கவலையுடன் சுட்டிக்காட்டி உள்ளது.