பாண்டியன், மதுரையில் ஆட்டோ ஓடுநராக இருந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மதுரை அண்ணா சாலை பேருந்து நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் நோக்கிச் சென்ற போது, அரசு மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிலையத்தில், ஒரு முதியவர் பேருந்தில் ஏற முயன்று இருக்கிறார்.


அப்போது அவரில் ஒற்றைக்கால் செருப்பு அப்போது கீழே தவறி விழுந்துள்ளது. உடனே பேருந்திலிருந்து இறங்கிச் செருப்பைத் தேடியுள்ளார். முதியவர் செருப்பைத் தேடிக்கொண்டு இருக்கும் போது அவரை யார் என அடையாளம் கண்டுக்கொண்டுள்ளார் ஆட்டோ ஓடுநரான பாண்டியன்.


அந்த முதியவர் மதுரை கிழக்கு தொகுதியில் இரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நன்மாறன் அய்யா! ”மேடை கலைவாணர்" என்று அழைக்கப்படும் நன்மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். மதுரை கிழக்கு தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ வாக இருந்தார்.

அரசியலுக்குள் நுழைந்த காலம் முதல் எம். எல். ஏவாக இருந்த பொழுதும் அதற்கு பிறகு எளிமையான வாழ்க்கையை வாழ்பவர். எளியமையான தலைவர், மக்கள் எம். எல். ஏ என்று பட்டியலிட்டால் அதில் தவிர்க்க முடியாத நபர் நன்மாறன் அய்யா. நன்மாறன் அய்யாவுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கிறார்கள்.


2001, 2006 ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நன்மாறன் அய்யாவுக்கு ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். கலைஞர் உள்பட பல தமிழக தலைவர்கள் மத்தியில் மிகுந்த ப்ரியத்துக்கு உரியவர்.


உடனே பாண்டியன் அவரிடம் ஓடிசென்று தனது ஆட்டோவில் வருமாறு கேட்டுள்ளார். அதற்கு நன்மாறன் அய்யா , என்னிடம் ஆட்டோவில் வருவதற்கு பணம் இல்லை. என்னிடம் 20 ரூபாய் தான் இருக்கிறது. 20 ரூபாய் வாங்கிக்கொண்டு ஆட்டோவில் ஏற்றிக்கொள்வீங்களா? என்று கேட்டு இருக்கிறார். இதற்கு உடனே பாண்டியனும் சரி என்று சொல்லி நன்மாறன் அய்யாவை அவர் சொல்லிய இடத்தில் இறக்கிவிட்டு இருக்கிறார்.


நன்மாறன் அய்யாவுடன் பாண்டியன் செல்பி எடுத்து அதை தனது பேஸ்புக்கில் பதிவு செய்து ” மிகவும் எளிமையான, நேர்மையான, மனிதநேயம் கொண்ட மனிதர். எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.