“என்னையும் எனது கணவரையும் கருணைக் கொலை செய்யுங்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி உருக்கமாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், நளினி- முருகன் ஆகிய இருவரும், வேலூர் மத்தியச் சிறையில் தனித் தனியாகத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதனிடையே, இருவரும் தங்களை விடுவிக்கக்கோரியும், தங்களுக்கு பரோல் வழங்கக்கோரியும், நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வதும், சிறையில் உண்ணாவிரதம் இருப்பதுமாக இருந்து வந்தனர்.
இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக ஆளுநருக்கு இருந்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருந்து வருகிறார்.
இதனால், தங்களை விடுதலை செய்யக்கோரி நளினி - முருகன் இருவரும் மீண்டும் 2 வது முறையாக வேலூர் மத்தியச் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
தற்போது 2 வது நாளாக நளினி, உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், அகிம்சை போராட்டத்தின் ஒரு நிகழ்வாக,
“என்னையும் எனது கணவரையும் கருணைக் கொலை செய்யுங்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, நளினி உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார். அப்படியில்லை என்றால், தங்களை விடுதலை செய்யுங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, நளினி எழுதியுள்ள “கருணை கொலை கடிதம்”, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.