மகேந்திர சிங் தோனி விவசாயி ஆக மாறி, இயற்கை முறையில் தர்பூசணி மற்றும் பப்பாளி சாகுபடி செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ரன் அவுட்டாகி, கண் கலங்கிய படியே வெளியேறினார்.

அதன்பிறகு, அவர் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஆனாலும், அவர் தன்னுடைய ஓய்வையும் அறிவிக்கவில்லை.

இதனிடையே, அவர் எப்போது இந்திய அணிக்குத் திரும்புவார் என்று, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், மகேந்திர சிங் தோனி, தன்னுடைய முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராஞ்சியில் இயற்கை முறையில் தர்பூசணி விவசாயம் பயிரிடுகிறார்.

தர்பூசணி பயிரிடுவதற்கு முன்பாக, விவசாயிகள் தொன்று தொட்டு செய்வது போல, பூமி பூஜையை செய்தார். அதன்படி, ஊதுபத்தி ஏற்றி பூமியை வணங்கி, பின்னர் தானே தேங்காயை உடைத்து சாமி கும்பிட்டார். அதன்பிறகே, தோனியே நேரடியாக விவசாய நிலத்தில் இறங்கி, தர்பூசணி விதைகளை நிலத்தில் ஒவ்வொன்றாக்கப் பயிரிட்டார்.

மேலும், கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பப்பாளி நடவு செய்து, தோட்டம் அமைத்த நிலையில், இன்று தர்பூசணி பயிரிட்டுள்ளதாகவும், தோனி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “விவசாயம் செய்வது, மகிழ்ச்சி அளிப்பதாகவும், மனதுக்கு நெகிழ்ச்சியாக இருப்பதாகவும்” அந்த பதிவில் தோனி தெரிவித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி விவசாயி ஆக மாறி பயிர் செய்ததற்கு, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், இது விவசாய தொழிலுக்கும், விவசாயிகளுக்கும் விழிப்புணர்வாக இருக்கும் என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மகேந்திர சிங் தோனி விவசாயி ஆக மாறிய வீடியோவை இதுவரை 4 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ள நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இதனால், தோனி விவசாயம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.