“அடுத்த 40 ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறும்” என்று, சுற்றுச்சூழல் ஆய்வுகள் எச்சரித்து உள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கவலைத் தெரிவித்து உள்ளது.
“எதிர்காலத்தில் சென்னை எப்படியெல்லாம் இருக்கப் போகிறது?” என்பது குறித்து கவலை அளிக்கும் தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக, “தமிழ்நாட்டில் சென்னை உட்பட பிற நகர்ப்புறங்களில் எதிர்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படக்கூடும்” என்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இவற்றுடன், ““உலகம் முழுவதும் வெள்ளம், புயல்கள் மற்றும் வறட்சி போன்ற தீவிரமான வானிலை உருவாக்கும்” என்றும், அப்போது நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
குறிப்பாக, “பருவநிலை மாற்றம், நிலத்தில் ஊடுருவும் கடல் நீர், பருவமழை பொய்த்தது உள்ளிட்ட பல காரணங்களால் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் எதிர் காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படக்கூடும் எனவும், அதனை தவிர்க்க இந்தியா - ஜப்பான் கூட்டு முயற்சியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும்” அப்போது, தெரிவிக்கப்பட்டது.
தற்போது, அதன் தொடர்ச்சியாகவே “அடுத்த 40 ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறும்” என்று, சுற்றுச்சூழல் ஆய்வுகள் புதிய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
அதாவது, காலநிலை மாற்றம் பற்றி வெளியாகி இருக்கும் சர்வதேச ஆய்வறிக்கைகள் குறித்து விவாதிக்கும் கவன ஈர்ப்பு உரையாடல் நிகழ்ச்சியானது, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
இந்த காலநிலை மாற்றம் பற்றிய நிகழ்ச்சியை, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில், திமுக எம்.பி. கனிமொழி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழ்நாடு காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், திட்டக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், காலநிலை மாற்றத்தால் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் அபாயங்கள் நேரிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வறிக்கைகளில் எச்சரிக்கப்பட்டிருப்பது குறித்தும், பாதுகாப்புக்கான வழி முறைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. அத்துடன், “பலவித அபாயங்களில் இருந்தும், சென்னையை எப்படி பாதுகாப்பது?” என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர், “கடல் நீர் மட்டம் உயர்வதால் உலக அளவில் பாதிக்கப்படக்கூடிய 12 நகரங்களின் பட்டியலில் சென்னையும் இடம் பெற்றிருப்பதாக” கவலைத் தெரிவித்தார்.
இதனிடையே, “அடுத்த 40 ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகள் தீவுகளாகும்” என்கிற இந்த எச்சரிக்கையானது, சென்னை மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள நிலையில், இந்த செய்தி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.