திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம்,கரும்பை காணவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழர்களின் பண்டிகையான தைப் பொங்கல் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், கீழ்க்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ட்விட்டரில் கூறியதாவது : பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும், முழு கரும்பும் வழங்கி வந்தோம் ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம்,கரும்பை காணவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.