இளம் பெண்ணிடம் மிஸ்ட்கால் மூலம் சகோதரனாக அறிமுகமான இளைஞர், திடீரென காதல் மன்மதனாக மாறி திருமணம் செய்ய வலியுறுத்தி டார்ச்சர் செய்ததுடன், பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கங்காபிரம்பட்டி பட்டையூரைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் 28 வயதான மஞ்சுநாதன் என்ற இளைஞர், எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கி இருந்து உள்ளார்.
அப்போது, ஒரு நம்பருக்கு போன் செய்து பேசிய போது, அந்த அழைப்பு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு திருமணமான இளம் பெண்ணுக்கு சென்றுள்ளது.
அப்போது, போனை எடுத்து பேசிய அந்த பெண், “நீங்கள் என்னைத் தவறாக அழைத்துள்ளீர்கள்” என்று அந்த பெண் கூறியுள்ளார்.
அதற்குப் பதில் பேசிய மஞ்சுநாதன், “நான் தான் தவறாக அழைத்து விட்டேன். எனினும், உங்களிடம் பேசியது ஒரு சகோதரியிடம் பேசியது போல் இருக்கிறது” என்று, மஞ்சாநாதன் கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில், “முகம் தெரியாத ஒருவர் நம்மை சகோதரி” என்று கூறுகிறாரே, என்று நினைத்த அந்த இளம் பெண்ணும் பதிலுக்கு அந்த இளைஞனிடம் தொடர்ந்து பேசியிருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, தினமும் காலை வணக்கம் தொடங்கி, இரவு வணக்கம் வரை அந்த இளம் பெண்ணுக்கு மஞ்சுநாதன் அடிக்கடி போன் செய்து பேசி வந்திருக்கிறார்.
இருவரும் சகோதரன், சகோதரியாக சில வாரங்கள் பேசி வந்த நிலையில், அந்த இளம் பெண்ணின் குடும்ப சூழ்நிலை தெரிந்துகொண்ட அந்த இளைஞன், “நான் உங்கள் முகத்தைப் பார்க்க வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.
அதற்கு, அந்த பெண் “என்னிடம் சாதாரண போன் தான் இருக்கிறது” என்று கூற, உடனடியாக அந்த பெண்ணுக்கு ஆண்ட்ராய்டு போன் வாங்கி கொடுத்து, இன்னும் நெருக்கமாக முயன்றிருக்கிறார் மஞ்சுநாதன்.
அதன் படி, கடந்த மார்ச் மாதம் புதிய ஆண்ட்ராய்டு போனை அந்த பெண்ணிடம் கொடுக்க நேரில் வந்த போது, போனில் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் பயன்பாடுகள் குறித்து சொல்லி கொடுத்து, அவற்றையும் டவுண்லோடு செய்து கொடுத்து, அது பற்றியும் அந்த பெண்ணுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
இதனால், செல்போனை பெற்றுக்கொண்ட அந்தப் பெண், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்து உள்ளார். இதன் மூலமாக, தினமும் அவர்கள் இருவரும் வீடியோ காலில் பேசி வந்துள்ளனர்.
இப்படியாக, ஆரம்பத்தில் “அக்கா, அக்கா” என்று, சகோதரனாக பேசி வந்த மஞ்சுநாதன், போக போக காதல் மன்மதனாக மாறி அந்தப் பெண்ணிடம் காதலன் போல் பேசித் தொடங்கியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில், “என்னை நீ திருமணம் செய்து கொள்” என்று, அவர் வற்புறுத்தி இருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, “இனி என்னிடம் பேச மாட்டேன்” என்று, சண்டைபோட்டுள்ளார். இதனால், கோபம் அடைந்த மஞ்சுநாதன், கடந்த ஏப்ரல் மாதத்தில், தான் வாங்கிக் தந்த செல்போனை அந்தப் பெண்ணிடம் திரும்பப் பெற்றுள்ளார்.
ஆனால், அந்த பெண் போனை கொடுக்கும் போது, போனில் உள்ள சிம்கார்டு மற்றும் அதிலிருந்த தகவல்களை அழிக்காமல் செல்போனை அப்படியே திருப்பிக் கொடுத்துவிட்டார்.
போனை பெற்றுக்கொண்ட மஞ்சுநாதன், சில நாட்களில் அந்த செல்போன் மூலம், அந்தப் பெண்ணின் ஃபேஸ்புக்கில் இருந்து, அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வைத்து, “அந்தப் பெண்ணே, ஆண்களை பாலியல் தொழிலுக்கு அழைப்பதுபோல்” மஞ்சுநாதன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார்.
இந்த தகவல் சம்மந்தப்பட்ட பெண்ணின் கவனத்திற்குச் சென்ற நிலையில், இது குறித்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், இது தொடர்பாக தனது குடும்பத்தாரிடம் கூறி அழுதிருக்கிறார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சைபர் குற்றப் பிரிவு போலீசார், மஞ்சுநாதனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரை சிறையில் அடைத்தனர்.