விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அடுத்துள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரின் 15 வயது மகள் ஜெயஸ்ரீ, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இதனிடையே, ஜெயபாலுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்களான 51 வயதான முருகன் மற்றும் 60 வயதான கலியபெருமாளுக்கும் இடையே, முன் விரோதம் இருந்துள்ளது.

இந்த விரோதம் காரணமாக, சிறுமி ஜெயஸ்ரீயின் சித்தப்பா, ஏற்கனவே வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரு தரப்புக்கும் பகை அதிகரித்த நிலையில், சிறுமி ஜெயஸ்ரீ தனது வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, சிறுமியின் வீட்டிற்கு வந்த அதிமுக பிரமுகர்கள் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரும், சிறுமியை வீட்டிற்குள் கட்டி வைத்து, துன்புறுத்தி உள்ளனர்.

பிறகு, சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு, அங்கிருந்து இருவரும் தப்பியோடி உள்ளனர்.

அப்போது, மாணவியின் அலறல் சத்தம் மற்றும் வீட்டிலிருந்து புகை வருவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, போலீசாரிடம் அவர் வாக்கு மூலம் அளித்தார்.

ஆனால், சிறுமி 95 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, அந்த மாணவியை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்பேது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய 2 பேர் மீதுள்ள கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை, விரைவு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரைப் பயங்கரவாதிகளாகக் கருதி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.