சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மரணம் அடைந்த வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் வழக்குகள் பற்றிய தொடர்ச்சியாகப் பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல, தலைவர்கள் பலரும் நேரில் சென்று அவரின் குடும்பத்தைப் பார்த்தனர். அந்தவகையில், கடந்த மாதம் 27-ம் தேதி சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சென்று, ஜெயராஜின் மனைவி மற்றும் மகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி.

சென்னையில் முழு ஊரடங்கும் பிற மாவட்டங்களில் சில தளர்வுகளுடனும் ஊரடங்கு அமலிலிருந்த நேரத்தில் உதயநிதியின் தூத்துக்குடிப் பயணம், சமூகவலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சர்ச்சைகள் யாவும் சமூகவலைத்தளத்தில் வெடிக்கவே, இதுகுறித்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ``தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடிக்குச் சென்று வந்துள்ளார். சென்னை மாநகராட்சியிடமோ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமோ அதற்கான அனுமதியைப் பெறவில்லை. அவர் செய்தது சட்டத்துக்கு உட்பட்ட செயலா அல்லது சட்டத்தை மீறிய செயலா என்பதை விளக்க வேண்டும்'' என்று உதயநிதிக்குக் கேள்வியொன்றை முன்வைத்தார்.

இதைக்கண்ட உதயநிதி, உடனடியாக தனது ட்விட்டரில் பதில் அளிக்கப்பட்டது. அதில் ``இ-பாஸை காட்டிய பிறகே போலீஸார் ஒவ்வொரு தணிக்கைச்சாவடியிலும் பயணிக்க அனுமதித்தனர்'' என்று பதில் அளித்தார். கூடுதலாக, `மெயின் ரோடு' செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீஸாருக்கு பதிலளித்தோம் என நகையாடவும் செய்திருந்தார் உதயநிதி.

இருப்பினும் இதுவரை தூத்துக்குடி சென்றது யாருடைய இ-பாஸில் என்பது வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதேநேரம் ஒருவாரமாக அரசுத் தரப்பும் சட்டப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைக்கண்ட அமைச்சர் ஜெயக்குமார், ``உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் வைத்துதான் தூத்துக்குடி சென்றார் என்றால், அதை ஏன் ட்விட்டரில் வெளியிடவில்லை? தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உதயநிதிக்கு இசைவே கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்" - என்று, செய்தியாளர் பேட்டியில் சற்றே காட்டமாகத் தெரிவித்தார்.

ஆனால் அதன் பிறகும் இந்த விவகாரம் ஓயவில்லை. அமைச்சர் ஜெயகுமார் மீண்டும், ``உதயநிதி செய்தது 420 வேலை” என்றெல்லாம் சொல்லிவிட்டார்.

இவையாவும் நடந்து முடிந்து, ஒரு வாரத்துக்கும் மேலாகிவிட்டது.

உதயநிதி தரப்பிலும் இதுவரை தூத்துக்குடி சென்றது யாருடைய இ-பாஸில் என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதேநேரம் ஒருவாரமாக அரசு தரப்பும் சட்டத்துக்குப் புறம்பாக சாத்தான்குளம் சென்றதாக உதயநிதி மீது சட்டப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து சமூகவலைத்தளங்களிலும் கருத்துகள் பரப்பப்பட்டு வந்தன.

இப்போது `உதயநிதி விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன?' என்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் பத்திரிகையாளர் சார்பில் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், ``இப்போது கொரோனா பிரச்னை உச்சத்தில் இருப்பதால் இந்த விவகாரத்துக்கு அதிகநேரம் ஒதுக்கவில்லை. தேவைப்படும்போது, இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்போம்” எனக்கூறியிருக்கிறார்.

தி.மு.க தரப்பில், `தூத்துக்குடிக்கு உதயநிதியை அழைத்து வந்தவர் மாநில இளைஞரணி துணைச் செயலாளரான ஜோயல்தான். இ-பாஸ் ஏற்பாடுகளை அவர்தான் முன்னின்று செய்திருக்கிறார். உதயநிதி பெயரில் பாஸ் இல்லை என்றாலும் வேறு ஒரு நபர் பெயரில் பாஸ் பெற்று +1 என்று குறிப்பிட்டு அவருடன் உதயநிதி சென்றிருந்தார்' என்று அதிகாரப்பூர்வமில்லாமல், செய்திகள் வெளியிட்டு வருகிறார்கள்.

இவையாவும் ஒருபுறமிருக்க, இன்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் `சசிகலா விடுதலைக்குப் பின், அதிமுகவில் அவர் இணைவரா?' என்றும் பத்திரிகையாளர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், `கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை. ஒரு குடும்பத்தைத் தவிர, மற்றவர்கள் எவராயினும் அதிமுகவில் இணையலாம்' எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

எதிர்தரப்பினர் மீதான ஜெயக்குமாரின் இந்த அதிரடி பதில்கள், சமூக வலைத்தளத்தில் அவரை ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

- பெ. மதலை ஆரோன்