சென்னையில் ராணுவத்தின் கையெறி குண்டுகள் ஏலத்திற்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரயில் மூலம் பார்சல் அனுப்ப படும் பொருட்களை யாரும் உரிமை கோராத நிலையில், அந்த வருடத்தின் இறுதியில் அந்த பொருட்கள் எல்லாம் ஏலம் விடப்படுவது வழக்கம்.

அதன்படி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து, சென்னை சென்ட்ரலுக்கு சங்கமித்ரா ரயிலில் ஒரு பார்சல் வந்தது. ஆனால், அந்த பார்சல் சென்னைக்கு வந்து பல மாதங்கள் ஆன பிறகும், அதனை எடுத்துச் செல்ல யாரும் வரவில்லை.

இதனால், சென்னை ரயில்வே பார்சல் அலுவலகத்தில் கேட்பாரற்று வெகு நாட்களாக இருந்த பார்சல் எல்லாம், யானைகவுனியில் உள்ள ரயில்வே கிடங்குக்கு அனுப்பப்பட்டது.

இதனையடுத்து, அந்த பொருட்கள் எல்லாம் இன்று ஏலம் விடப்பட்டது. அப்போது, ஒவ்வொரு பார்சலாக பிரித்துப் பார்த்து அந்த பொருட்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஏலம் விடப்பட்டது.

அப்போது, ஒரு பார்சலை ஏலம் விடுவதற்காகத் திறந்து பார்த்தபோது, ராணுவத்தில் பயன்படுத்தப்படும் 10 கையெறி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ரயில்வே அதிகாரிகள், அந்த முகவரியை மீண்டும் சரி பார்த்துள்ளனர். அப்போது, அந்த பார்சல் சென்னையில் உள்ள ராணுவ அலுவலகத்திற்கு வந்தது தெரியவந்தது.

இதனால், ஏலம் எடுக்க வந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அந்த பார்சல் மட்டும் ஏலம் விடாமல், பத்திரமாக எடுத்து வைக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னையில் உள்ள ராணுவ அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.