மார்கழி மாதம் பிறந்ததையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்..” என மார்கழி மாத்தின் சிறப்புகளை ஆண்டாள் 'திருப்பாவை'யில் புகழ் பாடுகிறார்.

தமிழ் மாதம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனிப்பெரும் சிறப்புக்கள் உண்டு. அப்படி தனிப்பெரும் சிறப்புகளோடு திகழ்கிறது மார்கழி மாதம்!

அப்படி, மார்கழி மாதம் பக்தி மிக்க மாதமாகத் திகழ்கிறது. நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அதன்படி, தை மாதம் முதல் ஆனி மாதம் வரை தேவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தேவர்களுக்கு இரவுப் பொழுதாகவும் திகழ்வதாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்த வகையில், அதிகாலை பிரம்ம முகூர்த்தம் இந்த மார்கழியில் தான் வருவதாகவும், இந்த நேரம் என்பது தேவர்களுக்குப் பிரம்ம முகூர்த்தமாகத் திகழ்வதாகவும் வேத சாஸ்திரங்கள் கூறுகிறது. இதனால், இந்த மாத்தில் தினமும் அதிகாலை எழுந்து இறைவனை வழிபட்டால், ஒரு ஆண்டு முழுவதும் இறைவனை வழிப்பட்ட பலனை பெறலாம் என்பது ஐதீகம்.

சிவனுக்குரிய திருவாதிரைத் திருநாளும், அனுமன் அவதாரமும், விஷ்ணுவிற்குரிய வைகுண்ட ஏகாதசியும், மகாபாரத யுத்தம் நடந்து கீதை பிறந்ததும் இதே மார்கழி மாதத்தில் நிகழ்ந்தது.

இப்படியாக, பல்வேறு சிறப்பம்சங்களை ஒருங்கே பெற்ற மார்கழி மாதம் இன்று பிறந்ததையொட்டி, தஞ்சாவூர் வீதிகளில் அதிகாலையிலேயே திருப்பாவை திருவெண்பாவைப் பஜனை வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

அதேபோல், மார்கழி மாதம் பிறந்ததையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

குறிப்பாக, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் நள்ளிரவில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து, தங்க மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள் ரங்கமானாருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னர், ஆண்டாளுக்குத் தங்கத்தினால் திருப்பாவை நெய்யப்பட்ட புடவை அணிவிக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை பாடப்பட்டது. இதனைக் காண நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.

அதேபோல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை ஒரு மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டு திருப்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன.

முக்கியமாக, ஒவ்வொரு மாதமும் வீட்டு வாசலில் கோலம் போடுவது வழக்கமாகக் கொண்டிருந்தாலும், மார்கழி மாதத்தில் கோலம் போடுவது தனிப் பெரும் சிறப்பாகத் திகழ்கிறது. இந்த மாத்தில் கோலம் போடும்போது, மலர்களால் அலங்கரித்தும், சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பதையும், நமது முன்னோர்கள் கலாம் காலமாக கடைப்பிடித்து வரும் பழக்கமாக உள்ளது.

இதனிடையே, மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ண பகவானின் வார்த்தையிலேயே, இந்தமாத்தின் முக்கியத்துவத்தையும், சிறப்புகளையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.