அடுத்தடுத்து 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அருகில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான வெங்கடேசனுக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுடன் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து அடுத்த சில மாதங்களில் அவரது மனைவி கருவுற்றார். அவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, அவரிடம் சண்டை போட்டுவிட்டு, வெங்கடேசன் தன் மனைவியைப் பிரிந்து சென்றுவிட்டார்.

அதனைத்தொடர்ந்து வேலைக்கு கோவை சென்ற வெங்கடேசன், வேலை செய்யும் இடத்தில் நந்தினி என்ற பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி, அவரையும் திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு படித்துக்கொண்டே வேலைபார்த்து வந்த நந்தினியுடன், அவர் கடந்த 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். பின்னர், அவருடனும் தொடர்ந்து சண்டை போட்டு வந்த வெங்கடேசன், அவரிடமும் எதையும் சொல்லாமல் அவரை விட்டுப் பிரிந்து சென்னைக்கு சென்றுள்ளார்.

சென்னையில், தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகக் கூறி அந்த வெங்கடேசன், கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த அந்த காளீஸ்வரி என்ற செவிலியரை, தன் காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். பின்னர், அவரை 3 வதாக திருமணம் செய்துள்ளார்.

வெங்கடேசனின் செய்த இந்த 3 திருமணங்கள் பற்றிய தகவல்கள் எல்லாம், முதல் மனைவியான வெண்ணிலாவுக்குத் தெரியவரவே அவர் கடும் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து, 3 வது மனைவியான காளீஸ்வரியின் செல்போன் நம்பரை எப்படியோ பெற்றுக்கொண்டு, அவரை தொடர்பு கொண்ட வெண்ணிலா, வெங்கடேசன் பற்றிய எல்லா உண்மைகளையும் கூறியிருக்கிறார்.

காளீஸ்வரியோ, வெண்ணிலா கூறிய எதையும் நம்பாமல், “நான் வாழ்ந்தால் வெங்கடேசனுடன் தான் வாழ்வேன்” என்று பிடிவாதமாக கூறி, அவரிடம் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.

இதனால், கடும் கோபமடைந்த வெண்ணிலா, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள வெங்கடேசனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே செஞ்சி, கோவை, சென்னை ஆகிய ஊர்களில் அடுத்தடுத்து 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வெங்கடேசன், கல்யாண மன்னனாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.