வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோக்கள் எடுத்து பணம், நகை திருடும் கொள்ளையனை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சென்னை வடபழனியைச் சேர்ந்த மோகன் வடிவேல் என்பவர், கடந்த மாதம் 21 ஆம் தேதி வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் குடும்பத்துடன் ஊருக்குச் சென்றிருந்த போது ,வீட்டில் இருந்த 3 சவரன் நகை, 4500 பணம் மற்றும் வெள்ளி பொருட்களைக் கொள்ளையன் திருடிச் சென்றதாக” புகார் அளித்திருந்தார்.
அதே போல், அங்குள்ள பக்தவச்சலம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் குமார் என்பவரின் வீட்டிலும், இதே போன்று நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த வடபழனி போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, 2 வீட்டிலும் கைவரிசை காட்டியது ஒரே நபர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, சிசிடிவி காட்சிகளில் பதிவான நபரின் முக அடையாளங்களை வைத்து, பழைய குற்றவாளிகளின் முகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்போது வீட்டில் புகுந்து திருடும் பிரபல கொள்ளையன் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான அறிவழகன் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
அதாவது, பர்கூர் அடுத்து உள்ள மாதர் அல்லி கிராமத்தைச் சேர்ந்த அறிவழகனின் தந்தை, ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரியாக இருக்கிறார்.
அதே நேரத்தில், அறிவழகன் கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் இளங்கலை கணிதவியல் படித்துவிட்டு, சென்னை பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ படித்துள்ளதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அறிவழகனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், திருட்டு வழக்கில் கைது செய்யபட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு 15 நாட்களுக்கு முன்பு வெளியே வந்ததும் தெரிய வந்தது.
இதனால், அறிவழகன் ஓசூரில் பதுங்கி இருப்பதைத் தெரிந்துகொண்ட தனிப்படை போலீசார், அங்கு விரைந்து சென்று அறிவழகனைச் சுற்றி வளைத்து போலீசார் அதிரடியாகக் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யபட்ட எம்.பி.ஏ பட்டதாரியான அறிவழகன் மீது, சென்னை சைதாப்பேட்டை, கிண்டி உட்பட பல காவல் நிலையங்களில் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
குறிப்பாக, திருட்டில் ஈடுபடும் அறிவழகன், “பெண்கள் தனியாக இருக்கும் வீட்டை நோட்டமிட்டு உள்ளே புகுந்து, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து, அனை வீடியோவாக எடுத்து அவர்களை மிரட்டி நகை மற்றும் பணத்தை மிரட்டிப் பறித்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்” என்பதும் தெரியவந்து.
அத்துடன், பெண்களை பலாத்காரம் செய்து எடுக்கப்பட்டும் வீடியோவை பல நாட்களாக அவர்களிடம் காட்டி காட்டியே சம்மந்தப்பட்ட பெண்களைத் தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டும் வந்ததும் தெரிய வந்தது.
இப்படியாக, இது வரை 20 க்கும் மேற்பட்ட பெண்களை அறிவழகன், பாலியல் பலாத்காரம் செய்து பணம் மற்றும் நகைகளைக் கேட்டு மிரட்டி தனது கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது.
இப்படியான திருட்டில் ஈடுபட்டதின் காரணமாகவே, அவர் கடந்த 2019 மற்றும் 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், இந்த வழக்கில் இருந்து தான் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து அறிவழகனை நீதிமன்றத்தில் முன்னிறுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.