“மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கொடுத்தால் ஜல்லிக்கட்டு போட்டியில் நிறைய வீரர்கள் இன்னும் வளர்வார்கள்” என்று, பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கிய ஹாட்ரிக் நாயகன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழா களைக்கட்டிக்கொண்டிக்கொண்டு இருக்கிறது. உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளைய தினம் நடைபெற உள்ள நிலையில், முன்னதாக, அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்து உள்ளன.

அதன்படி, மதுரை பாலமேடு கிராமத்தில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நேற்றைய தினம் திமுக அமைச்சர்களான பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடி அசைத்து தொடங்கி வைத்த நிலையில், மாலை 5 மணி வரை போட்டிகள் நடைபெற்று முடிந்தன.

பாலமேட்டில் 7 சுற்றுகளாக நடைபெற்ற நேற்றைய போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.

இப்படியாக, 7 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் மொத்தம் 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம் பெற்றார்.

அதாவது, இந்த பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் தொடர்ந்து அதிக காளைகளை அடக்கி பிரபாகரன் என்ற இளைஞன் 3 வது ஆண்டாக இந்த ஆண்டும், முதல் பரிசு வென்று அசத்தி உள்ளதுடன், அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.

பிரபாகரன் ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டு ஆகிய இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியிலும் முதலிடம் பிடித்த நிலையில், தற்போது நடந்து முடிந்த இந்த 2022 பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியிலும் தொடர்ச்சியாக முதல் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார்.

மாடுபிடி போட்டியில் முதல் இடம் பிடித்த பிரபாகரன், மதுரை மாவட்டம் பொதும்பை பகுதியைச் சேர்ந்தவர்.

அதே போல், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 18 மாடுகள் பிடித்த கருப்பாயூரணி கார்த்திக்கு என்ற இளைஞருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டன.

மேலும், முதல் இடம் பிடித்த பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசிய போது, “நான் டிரைவராக வேலை செய்து வருவதாக” குறிப்பிட்டார்.

அத்துடன், “நான் போன வருடம் கேட்டதைப் போலவே, இந்த வருடமும் அதே கோரிக்கையை வைக்கிறேன்” என்று கூறிய பிரபாகரன், “ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அரசு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்று, தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடத்தார்.

“இப்படியாக, கடந்த இரு ஆண்டுகளாக நான் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டு வருகிறேன் என்றும், அதனால் இந்த முறையாவது எனக்கு அரசு வேலை கொடுத்தால் நன்றாக இருகு்கும் என்றும், எனது கோரிக்கைக்கு நமது முதல்வர் ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும், “சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கொடுத்தால், ஜல்லிக்கட்டு போட்டிகளில் இன்னும் நிறைய வீரர்கள் வளர்வார்கள் என்றும், எனக்கு இந்த தடவை அரசு வேலை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்றும்,” அவர் கூறினார்.

குறிப்பாக, “காளை மாடுகளை பிடிப்பது காலி பசங்கன்னு நிறைய பேர் நினைச்சுக்கிட்டு இருக்காங்க, ஆனால் இது காலி பசங்க பிடிக்கிறது கிடையாது” என்றும், முதலிடம் பிடித்த பிரபாகரன் விளக்கம் அளித்தார். பிரகாரனின் இந்த பேட்டி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.