மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதமாகக் காலம் காலமாகப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் திருவிழாவாகவே கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாக இன்று வரை திகழ்ந்துகொண்டிருக்கிறது.
இந்த உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடர்ந்து தடையின்றி நடத்துவதற்கென்று தனியாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடந்த
2017 ஆம் ஆண்டு வெளியிடப்படப்பட்டு, அது முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பல கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்குத் தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது இந்தப் போட்டிகளை நடத்துவதற்கும், பங்கேற்பதற்கும் தமிழக அரசு அப்போதே சில கட்டுப்பாடுகளையும் விதித்து இருந்தது. அதன் படி, தமிழக அரசின் விதித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வந்தன.
அதன் படி, கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு மேல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பாக முதலில் மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதன் தொடர்ச்சியாகவே, உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் படி, கோயிலுக்கு சொந்தமான காளை முதலாவதாக அவிழ்த்து விடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மற்ற மற்ற காளைகளும் கவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 788 காளைகளும், 430 மாடுபிடி வீரர்களும் களம் இறங்கி உள்ளனர். காளைகளை அடக்கி பரிசுப் பொருட்களை வென்று செல்ல மாடுபிடி வீரர்களும், காளை உரிமையாளர்களும் ஆவலுடன் களம் கண்டு வருகின்றனர்.
மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை, காளையர்கள் அடக்க துடிக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும், மதுரைக்கே உள்ள வீரத்தின் பெருமையைப் பேசும் விதமாக அமைந்துள்ளன.
அதே நேரத்தில், காலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளையின் உரிமையாளர்கள் என மொத்தம் 17 பேரை காளைகள் முட்டியதில் காயம் அடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தற்போது இன்னும் விறுவிறுப்படைந்து வருவதால், மதுரை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.