தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவனியாபுரத்தில் காளைகள் சீறிப்பாய்கின்றன.

“தை பிறந்தாள் வழி பிறக்கும் என்பது நமது முன்னோர் மொழி. இதோ தை பிறந்துவிட்டது. அதனால் தான், தை மாதத்தின் தொடக்க நாட்களை நாம் மிகவும் விசேசமாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

புத்தாடை உடுத்தி‌, இனம், மதம், பேதமின்றி.. உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைப் பரிமாறி மகிழ்ந்து வருகின்றோம்.

தை மாதத்தில் நாம் கொண்டாடும் பொங்கல் பண்டிகையில் தான், நம் முன்னோர்கள் எப்போதோ.. விதைத்துச் சென்ற, பண்பாட்டுக் கலாச்சாரங்கள் எல்லாம், இன்று வரை பூத்துக் குலுங்குகிறது.

அதற்குச் சாட்சிகள் தான், இன்றைய தலைமுறைகள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை. இதில், தான் தமிழர்களின் வீரம் வெளிப்படுவதாக நமது முன்னோர்கள் மிக ஆழமாகப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். இதற்கு, சங்க இலக்கியங்கள் மட்டுமல்ல, இன்று அவனியாபுரத்தில் சீறும் காளைகளை, காளையர்கள் வீரத்தோடு அடக்கும் நேரடி ஜல்லிக்கட்டு திருவிழாவின் காட்சிகளே சாட்சி.

அதன்படி, தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு திருவிழா இன்று தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாகத் தொடங்கி நடைபெற்ற வருகிறது.

குறிப்பாக, உலக பிரசித்தி பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது, மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாடி வாசலிலிருந்து சீறி வரும் காளைகளை, காளையர்கள் வீரத்துடன் அடக்கி மண்ணின் மகிமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 730 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு, காளைகளை அடக்கி, பரிசு மழையில் நினைந்து வருகின்றனர்.

காளைகளை அடக்கியதில், இதுவரை 11 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அவர்களுக்கு, அங்கேயே முதலுதவி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டன. இதனிடையே, தமிழகம் முழுவதும் உள்ள ஜல்லிக்கட்டு ரசிகர்கள், அவனியாபுரத்திற்குப் படையெடுத்து உள்ளதால், அவனியாபுரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

சண்டையில் கிளியாத சட்டை உண்டா என்ன?