தற்கொலை மிரட்டல் விடுத்து ரயில் உயர்மின் அழுத்தக் கம்பியில் தொங்கிய இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் தாப்ரா ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில், கடந்த 11 ஆம் தேதி இளைஞர் ஒருவர், உயர்மின் அழுத்தக் கம்பியில் தொங்கியபடி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வழியாகச் சென்ற பயணிகள், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள ரயில் உயர்மின் அழுத்த மின்சாரம், உடனடியாக துண்டிக்கப்பட்டது. அத்துடன், அந்த வழியாகக் கடந்து செல்ல வேண்டிய ரயில்கள் எல்லாம் அப்படியே, பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து, ரயில்வே ஊழியர்களின் உதவியுடன், ரயில்வே போலீசார் ரயில் இஞ்சினை மட்டும் ஓட்டி வந்து, அதன் மீது மேற் கூரையில் ஏறிக்கொண்டனர்.
அப்போது, ரயில் உயர்மின் அழுத்தக் கம்பியில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த இளைஞன் அருகில் வந்து, அந்த இளைஞனைக் கீழே இறக்கினர். அப்போது, அந்த இளைஞன் அவர்களுடன் சற்று மல்லுக்கட்டினான். இதனையடுத்து, அந்த இளைஞனை மீட்ட அதிகாரிகள், அந்த ரயிலின் மேற்கூரையிலேயே, படுக்க வைத்து, கை மற்றும் கால்களைப் பிடித்தபடி அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து, ரயில் நிலைய மின் கம்பிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு, நிறுத்தப்பட்ட ரயில்களும் மீண்டும் இயக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.