லாக்கப் டெத் இந்திய அளவில் குஜராத், தமிழ்நாட்டிலேயே அதிகம் என்று, அதிர வைக்கும் ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட அன்றே அவர்கள் இருவரும் மர்மமான முறையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் இந்த கொடுஞ் செயலுக்கு பெரும்பாலன இந்திய பிரபலங்கள் முதல் சாமானிய மனிதர்கள் வரை தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணையை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்திய அளவில் குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் தான் அதிக அளவிலான லாக்கப் டெத் மரணங்கள் நிகழ்ந்து உள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2018 ஆம் ஆண்டின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, “ கடந்த 2018 ஆம் ஆண்டில் மொத்தம் 70 லாக்கப் டெத் மரணங்கள் பதிவாகி உள்ளானதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.
“ அப்படி லாக்கப் டெத்தில் மரணம் அடைந்தவர்களில் 46 பேர் ரிமாண்டில் இல்லை” என்றும், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
“குஜராத்தில் இதே போன்ற 14 மரணங்கள் பதிவாகி உள்ளதாகவும், தமிழ்நாட்டில் லாக்கப் டெத் மரணங்கள் 12 பதிவாகி உள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், “ஆந்திராவில் 11 மரணங்களும், மராட்டிய மாநிலத்தில் 7 மரணங்களும், ராஜஸ்தான் மாநிலத்தில் 5 மரணங்களும், மத்தியப் பிரதேசத்தில் 4 மரணங்களும், அசாம், சத்தீஸ்கார், அரியானா, கர்நாடகா, ஒடிசா, ஆகிய மாநிலங்களில் தலா 2 மரணங்களும் நிகழ்ந்துள்ளதாக” அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், “பஞ்சாப், தெலுங்கானா, பீகார், ஜார்கண்ட், கேரளா ஆகிய மாநிலங்களிலும் தலா ஒருவர் மட்டுமே லாக்கப் டெத்தில் உயிரிழந்துள்ளதாக” தெரிய வந்துள்ளது.
“இதில், ரிமாண்டில் இல்லாத மற்றும் போலீஸ் காவலில் இருக்கும் பொது உயிர் இழந்த 46 சம்பவங்களில், 29 சம்பவங்களில் மட்டுமே கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், மற்றவர்கள் மீது சாதாரண பிரிவுகளின் படியே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதும்” தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த மரணங்களுக்கு போலீசார் தெரிவித்துள்ள காரணங்கள் என்னவெனில், “அதிக எண்ணிக்கையிலான காவலில் இறப்புகள் நோய் காரணமாக நிகழ்ந்துள்ளதாகவும், தற்கொலைகள் மற்றும் தப்பிக்கும் போது உயிர் இழப்பதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, “தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2018 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி, என்கவுண்டர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு போலீசாருக்கு கூட, இதுவரை ஒரு தண்டனையும் கிடைக்க வில்லை” என்று அப்பட்டமாக தெரிய வந்துள்ளது.
“பகுப்பாய்வு செய்த தரவுகளின் படி, லாக்கப் டெத் மரணங்கள் உட்பட மனித உரிமை மீறல்களுக்கு இதுவரை எந்த போலீசாரும் தண்டிக்கப்படவில்லை” என்றும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
இதுதான், இந்தியாவில் போலீசாரும், போலீசார் நிகழ்த்தும் லாக்கப் டெத்தின் மரண விவரங்களாக இருக்கின்றன.
முக்கியமாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 3 வருடத்தில் மட்டும் 119 என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.