திரைப்பட பாடலாசிரியர் சினேகனின் கார் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்து உள்ளார்.

கவிபேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து, அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் பாடல் எழுதி தமிழக மக்களிடம் பிரபலமானார் கவிஞர் சினேகன்.

தமிழ் சினிமாவில் இது வரை ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதி, பலரது கவனத்தையும், ஈர்த்த கவிஞர் சினேகன், இயக்குநர் அமீர் உடன் “யோகி” என்னும் படத்தில் நடித்து, நடிகராகவும், பாடகராகவும் ரசிகர்களுக்கு மேலும் அறிமுகம் ஆனார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினேகன், உலகம் முழுவதும் அறியப்பட்ட நபராக மாறிப்போனார்.

அதன் தொடர்ச்சியாக, நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த சினேகன், அந்த கட்சியில் மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்களுக்கு இடையே கடந்த 16 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சவேரியார் புரத்தில் கவிஞர் சினேகனின், காரில் பயணித்து உள்ளார். அப்போது, கார் வேகமாகச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கு சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது திடீரென்று மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில், அந்த இரு சக்கர வாகனத்தில் சென்ற அங்குள்ள ஊனையூரைச் சேர்ந்த அருண் பாண்டி என்ற இளைஞரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர், திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்கைள் அளிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, அவர் சென்னை போரூரில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இளைஞன் அருண் பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இதனையடுத்து, “காரை ஓட்டிச் சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளரும், கவிஞருமான சினேகன் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் மற்றும் விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் திருமயம் காவல் துறையினர் வழக்குப் பதிவு” செய்துள்ளனர். கார் ஓட்டி வந்த சினேகனிடம் திருமயம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அவர் விசாரணைக்கு ஆஜராகலாம் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன், கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கவிஞர் சினேகன் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால், புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.