“ஒழுங்கு மரியாதையா பணத்தை வெளிய தள்ளு.. மெஷின் ஆச்சேன்னு பாக்குறேன்.. இல்ல அவ்வளவு தான்” என்று, ஏடிஎம் இயந்திரத்தோடு ஒருவர் மல்லுக்கட்டிக்கொண்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருட்டு ஒரு குற்றம் என்றாலும், அது செயல்படுத்தப்படும் விதங்கள் சில நேரங்களில் நகைச்சுவையையும், வேடிக்கையும் ஏற்படுத்துவது உண்டு. இது போன்ற திருட்டு சம்பங்கள் சினிமாவில் நடைபெற்றால், நாம் கை தட்டி சிரித்து மகிழ்வோம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தால், நிச்சயம் நமக்கு சிரிப்பைத் தராது. ஆனால், அனைத்து வருத்தங்களையும் தாண்டி, கரூர் பகுதியில் நடைபெற்ற திருட்டு ஒன்று நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது. அந்த காட்சியைப் பார்த்த யாரும் நிச்சயம் சிரிக்காமல் இருக்க முடியாது.

கரூர் மாவட்டத்தில் மிகவும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகத் திகழ்கிறது அங்குள்ள ஜவஹர் பஜார். இந்த பகுதியில், தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் தான், ஒருவர் பணம் திருட வந்து உள்ளார்.

அதன் படி, நேற்று 3 மணி அளவில் ஏடிஎம் மையத்திற்கு வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், அங்கு சுற்றும் முற்றும் பார்த்த படியே, உள்ளே நுழைந்து உள்ளார். ஏடிஎம் மையத்திற்குள் உள்ளே நுழைந்ததும், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் போன்ற ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு, ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும் இடத்தை வெட்டுகிறார்.

குறிப்பாக, “பணத்தைக் கொடு.. பணத்தை கொடு..” என்று, கத்தியபடியே, அந்த ஏடிஎம் இயந்திரத்தை மூச்சு முட்டும் அளவுக்கு வெட்டித் தள்ளி உள்ளார். அதில், பணம் திருடவும் முயன்று உள்ளார்.

ஆனால், பல முறை அந்த அந்த இயந்திரத்தில் வெட்டிப் பார்த்தும், பல கோணங்களில் முயன்று பார்த்தும் ஏ.டி.எம்.மிலிருந்து கடைசி அவரை பணம் வரவே இல்லை. பணம் வராத காரணத்தால், பெருத்த ஏமாற்றம் அடைந்த அவர், ஏ.டி.எம் இயந்திரத்தைக் கடைசியாக ஒரு முறை வெட்டி விட்டு, அங்கிருந்து ஓடி விட்டார்.

ஆனால், அந்த நபர் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்ற போது, அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அலாறம் ஒலித்ததாகத் தெரிகிறது. அந்த வங்கி அதிகாரியின் செல்போன் எண்ணிற்கும் சிக்னல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர்கள் அனைவரும் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, அந்த ஏ.டி.எம் இயந்திரம் முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்பட்டது.

இதனையடுத்து, அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை அதிகாரிகளும், போலீசாரும் ஆய்வு செய்தனர். அதில், “சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தனது பையில் மறைத்து வைத்திருந்த ஒரு அரிவாள் கத்தியை எடுத்துப் பணம் எடுக்கும் எந்திரத்தை வெட்டியது” தெரிய வந்தது.

முக்கியமாக, “ஒழுங்கு மரியாதையா பணத்தை வெளிய தள்ளு.. மெஷின் ஆச்சேன்னு பாக்குறேன்.. இல்ல அவ்வளவு தான்” என்று, அந்த இயந்திரத்தோடு அவர் மல்லுக்கட்டிப் போராடியதும்” தெரிய வந்தது.

இந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை தீவிரமாகத் தேடி வந்தனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து, அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்ற நபர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த மொய்சன் குமார் என்பது தெரிய வந்தது.

அத்துடன், “திருச்சியில் இருந்து கரூர் வந்த மொய்சன் குமாரிடம் பணம் இல்லாததால், குடிபோதையில் அப்பகுதியில் இருந்த பழக்கடையில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு, அந்த ஏ.டி.எம் இயந்திரத்தை அவர் உடைக்க முயற்சி செய்ததும்” போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.