கள்ளக்காதலைக் கைவிடாத தொழிலதிபரைக் கொன்று, மனைவியும் மகனும் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் வேலம்பாளையம் பகுதியில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் எரிந்த நிலையில் கார் ஒன்று நின்றிருந்தது. இது குறித்து விரைந்த வந்த பரமத்தி போலீசார், காரில் உள்ளே பார்த்துள்ளனர். அப்போது, காரின் பின்பக்கம் சீட்டில் ஆண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுக் கிடப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காரின் பதிவு எண்ணை வைத்து, அதன் முகவரியைச் சேகரித்தபோது, அந்த கார் கரூர் நொய்யல் குறுக்குச்சாலைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதான மணி என்கிற ரங்கசாமிக்குச் சொந்தமானது என்பதும், அவர் தொழிலதிபர் என்பதும் தெரியவந்தது. அப்போதே, அவர்தான் கொலை செய்யப்பட்டிருக்கிறர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர், காரின் உரிமையாளர் வீட்டிற்குச் சென்றபோது, வீட்டில் கொலை செய்யப்பட்டவரின் மனைவி 39 வயதான கவிதாவும், 19 வயதான அஷ்வினும் இருந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், இருவரையும் தனித்தனியாக விசாரித்ததில் உண்மை தெரியவந்தது.
விசாரணையில், கணவர் ரங்கசாமிக்கு குடிப்பழக்கம் இருப்பதும், இதனால் அவரது நிறுவனத்தில் பணியாற்றும் கூலித் தொழிலாளி ஒருவருடன் தகாத உறவில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கணவன்-மனைவிக்கு இடையே கடந்த 2 நாட்களாகப் பிரச்சனை எழுந்துள்ளது.
இது தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டபோது, ரங்கசாமி தனது மனைவி மற்றும் மகனைத் தாக்கி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது மகன் அஷ்வின், தந்தையைக் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், என்ன செய்வது என்று தெரியாமல், தாயும் மகனுமாகச் சேர்ந்து, ரங்கசாமியை காரின் பின்பக்க சீட்டில் படுக்க வைத்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குக் காரை ஓட்டிச்சென்று, அங்குக் காருடன் தந்தையை தீ வைத்து எரித்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, கொலை வழக்கு தொடர்பாகத் தாயையும், மகனையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, கள்ளக்காதலைக் கைவிடாத தொழிலதிபரைக் கொன்று, மனைவியும் மகனும் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.