கந்த சஷ்டி கவசம் சொல்லும் கருத்துக்களை, ஆபாசமாக சொல்லிய காரணத்துக்காக, கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் மீது கடந்த வாரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதேபோல, அந்த வீடியோவில் பேசியிருந்த வி.ஜே. சுரேந்திரன், ஜூலை 17 ம் தேதி, புதுச்சேரியில் சரண் அடைந்திருந்தார்.
இவர்கள் இருவரில், செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் 2 நாட்களாக ஆய்வு செய்து வந்தனர்.
அங்கு கிடைக்கப்பெற்ற ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். மேலும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏடிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் தலைமையில் அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்துச் சென்றனர். அனைத்துக்கும் பிறகு, அங்கு பாதுகாப்புப் பணியில் ஒரு காவலர் நியமிக்கப்பட்டிருந்தார். இதுதவிர கறுப்பர் கூட்டத்திற்கு சொந்தமான பிரிண்டிங் பிரஸ்ஸூக்கும் சீல் வைக்கப்பட்டது.
சரணடைந்திருந்த சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்திருந்தனர். அதில் உரிய அனுமதியின்றி இ-பாஸ் பெறாமல் புதுச்சேரிக்குள் நுழைந்தது, கூட்டம் கூட்டியது, மாஸ்க் அணியாதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் சுரேந்தர் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்குகளோடு, இந்து அமைப்பினரும் பாஜகவும் அளித்த கந்த சஷ்டி கவச அவமதிப்பு புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன் மற்றும் சுரேந்தர் ஆகியோரை தனிப்பட்டு விசாரித்தனர். முடிவில் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற வாசலில் வைத்து, வழக்கில் தொடர்புடைய சுரேந்திரன் பத்திரிகையாளர் மத்தியில் பேசியிருந்தார். அப்போது, `எங்கள் மீது புகார் அளித்தவர்கள், எங்கள் வீட்டிலுள்ளவர்களை மனரீதியாக துன்புறுத்தி, அவர்களுக்கு அழுத்தம் தரத்தொடங்கிவிட்டனர். அதனால்தான் நான் சரணடைந்து இருக்கின்றேன்.
நாங்கள் இல்லாத விஷயத்தை வீடியோவில் சொல்லவில்லை. இருக்கும் விஷயத்தை, மக்களுக்குப் புரியும்படியான மொழியில் பேசியிருந்தோம். அவ்வளவுதான். அது தவறென சொல்லி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எதுவாகினும் சட்டரீதியாக சந்திக்க, நாங்கள் தயார் தான்!' என சொல்லியிருந்தார்.
இப்படி தொடர்ந்துக் கொண்டிருந்த இந்த வழக்கில், இன்றைய தினம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைத் தடை செய்யுமாறு அந்த யூடியூப் நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர். விரைவில் சேனல் தடை செய்யப்படும் என எதிர்பார்க்கவும் படுகிறது. இதற்கான காரணமாக, கறுப்பர் கூட்டத்தில் வெளியாகியிருக்கும் பிற வீடியோக்கள் உதாரணம் சொல்லப்பட்டுள்ளன. அவை வருங்காலத்தில் சர்ச்சையாகலாம் என்ற கணிப்பின் அடிப்படையில் இந்த வீடியோக்கள் நீக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுவரை பெருங்கட்சிகள் சார்பில் இதுபற்றி வெளிப்படையாக நிலைப்பாடுகள் சொல்லப்படாத நிலையில், திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்
இப்போது குற்றம் சாட்டியுள்ளார். இந்து விரோதிகள் என கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என்பது அரதப்பழசான சிந்தனை என தெரிவித்துள்ள ஸ்டாலின், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி ஓபிசி இட ஒதுக்கீட்டை ஒழிக்க முயற்சி நடக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
- பெ.மதலை ஆரோன்