மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் கோ.சண்முகநாதன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாள் விழா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
ஆனால், அப்போது கருணாநிதியிடம் உதவியாளராக இருந்த சண்முகநாதன், திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில், சண்முகநாதனுக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சண்முகநாதனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அதாவது, கருணாநிதியின் கோபாலபுரம் வீடு தொடங்கி, தமிழகத்தின் அரசியல் மேடைகள் என்று விரிந்து, செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை, கருணாநிதி செல்லும் இடங்களுக்கு எல்லாம் கூடவே சென்று, அவருக்குத் தேவையான உதவிகளை சண்முகநாதன் செய்து வந்தார்.
இதனால், திமுகவில் சண்முகநாதனை தெரியாத தொண்டர்களே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு, திமுக தொண்டர்களுக்கு சண்முகநாதன் எப்போதுமே நல்ல பரிச்சயமானவராக இருந்தார்.
இப்படியான நிலையில் தான், அதுவும் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, சண்முகநாதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் மத்தியிலும், சக திமுக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இப்படியாக, கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் கருணாநிதியின் நிழல் போல இருந்த சண்முகநாதன், இன்றைய தினம் திடீரென்று உயிரிழந்தார்.
உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன், மாரடைப்பால் இன்றைய தினம் காலமானர். உயிரிழந்த சண்முகநாதனுக்கு வயது 80.
கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனின் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.