கல்கி சாமியாருக்கு சொந்தமான 907 ஏக்கர் நிலத்தை அதிரடியாக முடக்கி, வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் அது தொடர்புடைய இடங்களில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

அப்போது, சுமார் 800 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், கணக்கில் காட்டப்படாத சொத்து விபரங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களும் அப்போது கைப்பற்றப்பட்டன.

குறிப்பாக, 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சொத்துக்களின் ஆவணங்களைத் தவிர, 44 கோடி ரூபாய் பணமும், சுமார் 90 கிலோ தங்கமும், 20 கோடி ரூபாய் மதிப்பிள்ளான வெளிநாட்டு கரன்சிகளையும் அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

மேலும், பல்வேறு வெளிநாடுகளில் கல்கி ஆசிரமம் சார்பில் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதும் அப்போது அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனிடையே, கல்கி சாமியார் என்று அழைக்கப்படும் விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, அவரது மனைவி ப்ரீத்தா ஆகிய இருவரும், பினாமியின் பெயரில் சொத்துக்கள் வாங்கி வைத்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணையை, வருமான வரித்துறையினர் மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், முதல் கட்டமாக சுமார் 907 ஏக்கர் நிலத்தை, பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் தற்போது முடக்கியுள்ளனர். இதனால், கல்கி ஆசிரம பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.