தமிழகத்தில் புதிதாக 500 கலைஞர் உணவங்கள் திறக்கப்பட உள்ளநிலையில் அதிமுக கட்சியைச் சேர்ந்த 2 முன்னாள் அமைச்சர்கள் இருவேறாக கருத்து தெரிவித்துள்ளனர்.

தரமான உணவை மானிய விலையில் ஏழை எளிய மக்கள் 3 வேளையும் சாப்பிடும் வகையில் அம்மா உணவகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது திமுக அரசு பதவியேற்றநிலையில், அம்மா உணவகம் போன்று, 500 கலைஞர் உணவகங்கள் உருவாக்கப்பட உள்ளது.

இதையடுத்து கலைஞர் உணவகம் திறப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவில் மாதிரி சமுதாய சமையல் கூடம் செயல்படுத்துவது குறித்து நேற்று புது டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உணவுத் துறை அமைச்சர் அவர்கள், வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக பேசியுள்ளது “அம்மா உணவகம்” என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது.

இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், புதிதாக திட்டங்களைத் தீட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, புதிதாகத் தீட்டப்படும் இதுபோன்ற திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை.

அதே சமயத்தில், நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றே நான் கருதுகிறேன்.

ஏழையெளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவகங்களை அமைப்பது என்பது மாண்புமிகு அம்மா அவர்களின் சிந்தனையில் உதித்த ஓர் அற்புதமான திட்டம். எனவே இந்தத் திட்டம் ‘அம்மா உணவகம்’ என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் விருப்பம் ஆகும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “கலைஞர் உணவகம் கொண்டு வருவதை வரவேற்கிறோம்” என மதுரையில் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் மதுரை அதிமுகவினரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு விருப்ப மனுக்களை வாங்கினார்.

ஏராளமான அதிமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த நிகழ்வில், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர் . பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசினார்.

அப்போது, "நகர்புற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும், அதிமுகவை வெல்ல தமிழகத்தில் எந்தவொரு சக்தியும் இல்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு தரமான அரிசி வழங்கினோம் . தரமற்ற அரிசி அதிமுக ஆட்சிக் காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது என்ற அமைச்சர் மூர்த்தியின் கருத்து தவறானது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எந்தவொரு சலசலப்பும் நடக்கவில்லை. அமைதியான முறையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் தக்காளி விலை 100 ரூபாய்க்கு விற்கப்பட்டபோது கூட்டுறவு அங்காடிகளில் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படுவதில் அதிமுகவுக்கு எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை. கலைஞர் உணவகம் கொண்டு வருவதை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம். ஆனால் அம்மா உணவகங்களை மறைக்காமல் கலைஞர் உணவகங்கள் செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அதிமுக கட்சியைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் இருவேறாக பதிலளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.