நேற்று வரை மாநிலமாக இருந்த ஜம்மு - காஷ்மீர், இன்று முதல் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 370-வது சிறப்புச் சட்டப்பிரிவின் படி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டு வந்தது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அமைந்திருப்பதால், அங்குத் தீவிரவாத தாக்குதல் அடிக்கடி நடந்து வந்தன. இதனால், ராணுவ வீரர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புச் சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ஐ, கடந்த ஆகஸ்ட் மாதம் அதிரடியாக மத்திய அரசு நீக்கியது.

பின்னர், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியப் பகுதிகளை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, மறுசீரமைப்பு சட்டத்தையும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள், இன்று முதல் யூனியன் பிரதேசங்களாக முறைப்படி அறிவிக்கப்பட்டன.

அதன்படி ஜம்மு - காஷ்மீருக்கு கிரிஷ் சந்திரா மர்மு, லடாக்கிற்கு ஆர்.கே.மாத்தூர் ஆகியோர் துணை நிலை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 2 துணை நிலை ஆளுநர்களுக்கு, காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஜம்மு - காஷ்மீர், இன்று முதல் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 29 ல் இருந்து 28 ஆக குறைந்துள்ளது. அதேபோல், யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7 ல் இருந்து, 9 ஆக உயர்ந்துள்ளது.