அரசியல் கட்சிகள் எழுப்பி உள்ள கேள்விகளுக்கு “தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்ட ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவது சரியாக இருக்கும்” என்று, திமுக எம்.பி. கனிமொழி விளக்கம் அளித்து உள்ளார்.
அதாவது, ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல் என்று, ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு என பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது பொருத்தமற்ற, மரபு மீறிய, உள்நோக்கம் கொண்ட, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
“மொழிவாரியாக 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவில் சில பகுதிகள் பிரிக்கப்பட்டன. இப்போதைய தமிழ்நாடு, மெட்ராஸ் என்ற பெயரில் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் தொடர்ந்து தனி மாநிலமாக இருந்தது” என்றும், சுட்டிக்காட்டி உள்ளார்.
“சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிரிக்கப்பட்ட மெட்ராஸ் மாகாணம் தான், தற்போது தமிழ்நாடு. எனவே தான், தற்போதைய மெட்ராஸ், தற்போதைய தமிழ்நாடு, நவம்பர் 1 ஆம் தேதி தோன்றியதன் அடிப்படையில் நவம்பர் ஒன்றாம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டு அந்த நாளை தமிழ்நாடு நாள் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அறிவித்தது” என்றும் கூறியுள்ளார்.
“எனவே சென்னை மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்கள் எல்லாம் நவம்பர் ஒன்றாம் தேதியையே அந்த மாநிலங்கள் உருவான நாளாகக் கொண்டாடுவதைக் கருத்தில் கொண்டு ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற்று, நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என்று தொடர்ந்து இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுக்க வேண்டும் என்றும், கேட்டுக்கொள்கிறேன்” என்றும், அவர் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
அதே போல், “நவம்பர் 1 ஆம் தேதிக்கு பதிலாக ஜீலை 18 ஆம் நாள் தான் தமிழ்நாடு நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது மிகவும் வியப்பாக உள்ளது” என்று, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கவலைத் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மெட்ராஸ் ராஜ்ஜியம் என்பது பின்னர் நாட்டில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகள் மெட்ராஸ் ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து சென்றன என்றும், அந்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநிலங்கள் தோன்றிய நாளாக கொண்டாடி வருகின்றன என்றும், அதே நாள் தான் சென்னை மாகாணம் தனியாக தமிழகமாக உருவெடுத்தது” என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த நிலையில் திமுக எம்.பி., கனிமொழி இது குறித்து அளித்துள்ள விளக்கத்தில், “தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படாது; முதல்வர் தனது கொள்கையில் இருந்து மாறமாட்டார்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
அத்துடன், “தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்ட ஜூலை 18 ஆம் தேதி தான் என்றும், அன்றைய தினமே தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவது சரியாக இருக்கும்” என்றும், திமுக எம்.பி., கனிமொழி விளக்கம் அளித்து உள்ளார்.