அமெரிக்க விமான தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், 3 ஆம் உலகப்போர் தொடங்கிவிட்டதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் கடந்த 3 ஆம் தேதி அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரான் ராணுவ புரட்சி பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சோலிமானி, உளவுப்பிரிவு தலைவர் உட்பட மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால், கடும் கோபடைந்த ஈரான், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவருக்கு 576 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டுள்ள 2 விமானத் தளங்கள் மீது, ஈரான் ராணுவம் இன்று காலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்தத் தாக்குதலில், 10 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தற்போது உறுதிசெய்துள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் 80 அமெரிக்க ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் அரசு தொலைக்காட்சி தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், அமெரிக்காவின் ஹெலிகாப்டர் உட்பட பல ஆயுதங்கள் முற்றிலும் சேதத்துக்குள்ளானதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மீதான ஈரானின் இந்த பதில் தாக்குதல், இருநாடுகளிடையே மீண்டும் உச்சக்கட்ட பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
முக்கியமாக, இந்த தாக்குதல், 3 ஆம் உலகப்போர் தொடங்கிவிட்டதா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, அமெரிக்கப் படை தளம் மீது ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதை, அந்நாட்டு ராணுவம் வீடியோவாக தற்போது வெளியிட்டுள்ளது.