அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவருக்கு 576 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
கடந்த 3 ஆம் தேதி, ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரான் ராணுவ புரட்சி பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சோலிமானி, உளவுப்பிரிவு தலைவர் உட்பட மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர்.
விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் வெடித்துச் சிதறியது. அத்துடன், விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதிகள் உட்படப் பல பகுதிகளில் ராக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்துச் சிதறின. இதனையடுத்து, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டன. அதே நேரத்தில், ஈரானிலும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக இரு நாடுகளிடையே எந்த நேரத்திலும் போர் மூழும் அபாயகரமான சூழல் உருவானது. இதனால், இருநாட்டு மக்களும் ஒரு வித அச்சத்துடன் காணப்பட்டனர்.
இதனிடையே, சுலைமானியின் இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்பிய ஈரான் அரசு ஊடகத்தில் வெளியான செய்தியில், “தளபதி காசிம் சுலைமானியைக் கொலைசெய்ய உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலைக்கு 80 மில்லியன் டாலர் விலை நிர்ணயம் செய்து, ஈரான் அரசு செய்தி வெளியிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 576 கோடி ரூபாய் ஆகும்.
இது தொடர்பாக ஈரான் அதிபர் பேசும் போது, “அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்றும்,அதற்கான சக்தி தங்களிடம் இருப்பதாகவும் கூறி, அப்படியொரு சரியான நேரத்துக்காகக் காத்திருப்பதாகவும்” எச்சரித்தார்.
“ஈரான் ராணுவம் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தினால், அந்நாடு கடும் விபரீதங்களைச் சந்திக்க நேரிடும்” என முன்னதாக ட்ரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தலைக்கே ஈரான் அரசு தற்போது 576 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.