கொரோனா வைரஸ் தடுப்புக்காக, நாடு முழுவது தளர்த்தப்பட்ட ஊரடங்கு அமலிலிருக்கிறது. இப்படியான நேரத்தில்தான், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட, காவல் நிலையத்தில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ்.
இருவரும் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் காவல்துறையினர் மீது பலதரப்பட்ட குற்றச்சாடுகள் வைக்கப்பட்டது. இவற்றை தவிர்க்க, தற்போது தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் அதிரடியாக நடைபெற்று வருகிறது.
ஜூலை மாதத்தின் தொடக்கத்தில், ஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து விசாரித்தபோது, ``இது வழக்கமான நடைமுறைதான். பதவி உயர்வு பெற்றவர்களுக்குப் புதிய பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதனுக்கு மூன்றாண்டுகள் பணி நிறைவுபெற்றதையடுத்து அவர் இடமாற்றப்பட்டுள்ளார். புதிய கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால், சென்னையில் ஏற்கெனவே பணியாற்றிவர். அதனால்தான் அவரை சென்னை போலீஸ் கமிஷனராக நியமித்துள்ளனர்" என்றனர்.
இருப்பினும், இந்த பணியிட மாற்றத்துக்கும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்தை ஒட்டி நிகழ்ந்த மாற்றம்தானோ என்ற எண்ணம் தற்போது எழுந்துள்ளது.
ஏனெனில், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணம் தொடர்பான விசாரணையைத் தடுக்க முயன்றதாக அவமதிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டி.குமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் உள்ளிட்டோரும் மாற்றப்பட்ட பட்டியலில் இருந்தனர்.
இப்போது, சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை வலுத்து வரும் நிலையில், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் 51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
இந்த மாற்றத்தில், தஞ்சை எஸ்.பி. மகேஷ்வரன் கடல் அமலாக்கப் பிரிவு எஸ்.பி. ஆக மாற்றப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சைபர் பிரிவு எஸ்பி செஷாங் சாய் மயிலாப்பூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி எஸ்.பி.யாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அடையாறு துணை ஆணையராக வி.விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.நகர் டிசியாக ஹரிகிரன்பிரசாத், பூக்கடை டிசியாக கார்த்திக் ஐபிஎஸ், கரூர் எஸ்.பியாக பகலவன் ஐ.பி.எஸ், திண்டுக்கல் புதிய எஸ்.பி ராகவலி பிரியா ஐபிஎஸ், கன்னியாகுமரி புதிய எஸ்.பி.யாக பத்ரி நாராயணன், ஈரோடு எஸ்.பியாக இருந்த சக்தி கணேசன் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாகவும், நாமக்கல் எஸ்.பியாக இருந்த அருளரசு கோவை எஸ்.பி.யாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை எஸ்.பி.யாக சுஜித்குமார், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக பாலாஜி சரவணன், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சண்முகபிரியா, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் ஐபிஎஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடையாறு துணை ஆணையர் பகலவன் கரூர் மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை உளவுப்பிரிவு எஸ்பி அரவிந்தன் திருவண்ணாமலை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் நிஷா சென்னை அம்பத்தூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் கார்த்திக் சென்னை பூக்கடை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலி எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா சென்னை சைபர் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். இப்படி மாற்றப்பட்ட 33 அதிகாரிகளுடன் மேலும் 18 எஸ்பிக்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவையாவும் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருந்தாலும், இன்னொருபக்கம் சாத்தான்குளம் வழக்கு சிபிசிஐடி கைவசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அவர்களும், வழக்கின் முக்கியமான ஆவணங்களை கைப்பற்றத்தொடங்கிவிட்டனர்.
- பெ.மதலை ஆரோன்.