“என் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான்” என்று, கிரிக்கெட் வீரர் அஸ்வின் சந்தித்த கொரோனா துயரங்களை பகிர்ந்துகொண்டு உள்ளார்.
இந்தியாவில் 2 வது அலையாக வீசிக்கொண்டு இருக்கும் கொரோனாவுக்கு திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என்று, பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக, சினிமா பிரபலங்கள் பலரும், தங்களது திரைப்படங்களின் படப்பிடிப்புகளை தற்போதைக்கு ஒத்திவைத்து உள்ளனர்.
அதே போல், விளையாட்டு வீரர்களில் சிலர் போட்டிகளில் பங்கேற்பதை விட்டு விட்டு, தங்களது குடும்பத்தினருடன் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகின்றனர். ஆனால், இந்தியாவில் கடந்த வாரம் வரை நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற சில வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகிச் சொந்த நாடு திரும்பினார்கள்.
இப்படியான நிலையில் தான், இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். இது, தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது.
அத்துடன், “இந்த இக்காட்டான கொரோனா காலகட்டத்தில், எனது குடும்பத்துடன் நான் இருக்க விரும்புகிறேன் என்றும், கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தினர் போராடி வரும் நிலையில், இந்த இக்காட்டான தருணத்தில் நானும் அவர்களுடன் உடன் இருப்பது மிகவும் அவசியம்” என்றும் அஸ்வின் விளக்கம் அளித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, “கிரிக்கெட் வீரர் அஸ்வினின் குடும்பத்தில் 10 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது” தெரியவந்தது.
இது தொடர்பாக கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி பிரீத்தி, அவருடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “ஒரே வாரத்தில் தனது குடும்பத்தில் 6 பெரியவர்கள், 4 சிறியவர்கள் என 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக” கூறியிருந்தார்.
இந்நிலையில், “தனது குடும்பத்தினர் கொரோனாவினால் பட்ட அவஸ்தையின் வேதனையை” கிரிக்கெட் வீரர் அஸ்வின், பகிர்ந்துகொண்டு உள்ளார்.
அதன் படி, “என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசி தான்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இதனால், “தடுப்பூசிகள் பற்றி வெளியில் உலவும் அச்சங்கள், முன் அனுமானங்கள், எதிர்மறை எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக” அஸ்வின் பேசியிருக்கிறார்.
“கொரோனா 2 ஆம் அலையில் சீரியஸ்னெஸ் பற்றி நான் பேசுகிறேன் என்று குறிப்பிட்ட அஸ்வின், “என் குடும்பத்தினர் கடைசி சில தினங்கள் அனுபவித்த துன்பங்களையும் பேசுகிறேன்” என்றும், குறிப்பிட்டார்.
அத்துடன், “வாக்சின்கள் அல்லது தடுப்பூசிகளின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறேன் என்றும், அது நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு மிக மிக அவசியம்” என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.
“என் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டது பிறகுதான் தெரிந்தது என்றும், இதில் முதல் 5 நாட்கள் என் தந்தை நன்றாக இருந்தார் என்றும், பிறகு ஆக்சிஜன் அளவு 85 ஆகக் குறைந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்தோம்” என்றும், பகிர்ந்துகொண்டு உள்ளார்.
“பின்னர், என் தந்தை குணமடைந்து வீடு திரும்பிய நிலையிலும், பல நாட்கள் அவரது ஆக்சிஜன் அளவில் முன்னேற்றம் இல்லை என்றும், தந்தைக்கு வேறு சில உபாதைகளும் இருந்தன என்றும், இருப்பினும் கொரோனா இருகட்ட தடுப்பூசிகளையும் அவர் போட்டுக் கொண்டதால் தான் அவர் மீண்டு வந்தார்” என்றும், தெரிவித்து உள்ளார்.
குறிப்பாக, “என் தந்தையைக் காப்பாற்றியது தடுப்பூசிதான் என்றும், உங்களுக்கு கொரோனா குறித்த எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், உங்களால் குழந்தைகள், குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு அழிவுக்குக் காரணமாகி விடலாம்” என்றும், அஸ்வின் எச்சரிக்கை விடுத்தார்.
“கொரோனாவிலிருந்து தப்பிக்கத் தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்றும், அதில் சந்தேகமேயில்லை, தயவு செய்து தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுங்கள்” என்றும், அஸ்வின் வலியுறுத்தி உள்ளார்.
முக்கியமாக, “கொரோனா சிகிச்சையில் இருக்கும் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும், அஸ்வின் தனது நன்றியைப் பதிவு செய்துள்ளார்.