மாநில அளவில் தொடர்ந்து பாஜக சரிவைச் சந்தித்து வரும் நிலையில், ஒரே வருடத்தில் 5 வது மாநிலத்திலும் ஆட்சியை இழக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்குக் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை, 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணப்பட்டன. தொடக்கத்தில், இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தன. ஆனால், போக போக பாஜக பின்னடைவும், காங்கிரஸ் முன்னிலையும் வகித்தன. மாலை 4 மணி நிலவரப்படி, ஆட்சி அமைக்கத் தேவையான 41 இடத்திற்கு மேல், காங்கிரஸ் கூட்டணி முன்னிலையிலிருந்து வருகிறது.
பாஜக கடந்த 6 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்தது. அதன்படி, கடந் 2015 ஆம் ஆண்டு 13 மாநிலங்கள் ஆட்சி அமைத்திருந்த பாஜக, அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு 15 மாநிலங்கள் ஆட்சி அமைத்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டில் 19 மாநிலங்களில் ஆட்சி அமைத்த பாஜக, 2018 ஆம் ஆண்டில் 21 மாநிலங்களில் ஆட்சியை நிறுவியது.
ஆனால், 2019 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களில் பாஜக தோல்வியைச் சந்தித்து வருகிறது. அதன்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கார், மராட்டியம், தற்போது ஜார்கண்ட் என ஒரே ஆண்டில் 5 வது மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழக்கிறது.
குறிப்பாக, இந்த 2019 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையிலான மோடி அரசு மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தாலும், வரிசையாக மாநிலங்களில் அதன் பலம் குறைந்து வருவது இதன் மூலம் தெரியவருகிறது.